நாடளாவிய ரீதியில் 5 மணித்தியாலங்கள் மின்வெட்டு; நீர் விநியோகமும் தடைப்பட்டது

by Staff Writer 03-12-2021 | 9:17 PM
Colombo (News 1st) இன்றைய தினம் சுமார் 5 மணித்தியாலங்கள் நாடளாவிய ரீதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கொத்மலையில் இருந்து பியகம வரையான மின்சாரத்தை கொண்டு செல்லும் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு மின் துண்டிப்பிற்கான காரணம் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மின்சார பொறியிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் போதே இந்த நிலைமை ஏற்பட்டது. மின் துண்டிப்பை அடுத்து பல பிரதேசங்களிலும் நீர் விநியோகமும் தடைப்பட்டது. இன்று முற்பகல் 11.30 அளவில் நாடளாவிய ரீதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்களின் அன்றாட செயற்பாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. கொழும்பில் வீதி சமிக்​ஞை கட்டமைப்பும் இயங்கவில்லை. இந்த நிலையில் பிற்பகல் 2.30 அளவில் கொழும்பு தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட சில இடங்களுக்கான மின் விநியோகத்தை இலங்கை மின்சார சபை வழமைக்கு கொண்டு வந்தது. மின்சார பொறியியலாளர் சங்கம் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்த பின்னர் கடந்த 26 ஆம் திகதி மின்சார சபையின் பொது முகாமையாளரினால் மின்சார அதிகார சபையின் அதிகாரங்களை விரிவுபடுத்தி சுற்றுநிரூபம் ஒன்று வௌியிடப்பட்டது. தொழிற்சங்க நடவடிக்கை மூலம் அவருக்கு ஒத்துழைப்பு வழங்குவதில் இருந்து விலகுவதற்கு தீர்மானம் எடுத்துள்ளதாக மின்சார பொறியியலாளர் சங்கத்தின் பொது முகாமையாளர் M.R.ரணதுங்கவிற்கு நேற்று பிற்பகல் அறிவிக்கப்பட்டிருந்தது. 5 மணித்தியாலங்கள் நாடளாவிய ரீதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதன் பின்னர், தாம் முன்னெடுக்கும் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக கைவிடுவதாக மின்சார பொறியியலாளர் சங்கம் இன்று பிற்பகல் அறிவித்தது. இந்த நிலையில் சிலருக்கு இடமாற்றம் வழக்கப்பட்டமை தொடர்பிலும் பொறியியலாளர் சங்கம் அண்மையில் கடும் எதிர்ப்பை வௌியிட்டது.