பாகிஸ்தானில் இலங்கையர் சித்திரவதைக்குட்படுத்தி கொலை

பாகிஸ்தானில் இலங்கையர் சித்திரவதைக்குட்படுத்தி கொலை

எழுத்தாளர் Staff Writer

03 Dec, 2021 | 8:48 pm

Colombo (News 1st) பாகிஸ்தான் Sialkot பகுதியில் இலங்கை பணியாளர் ஒருவர் கலகக்காரர்களால் சித்திரவதைக்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி கடமையை நிறைவேற்ற, அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என இலங்கை எதிர்பார்ப்பதாக வௌிவிவகார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் – சியால்கோட் வைராபாத் வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சித்திரவதைக்குட்படுத்தி கொலை செய்துவிட்டு உடலை எரியூட்டியுள்ளதாக பாகிஸ்தானின் DON இணையத்தளம் செய்தி வௌியிட்டுள்ளது.

சியால்கோட்டிலுள்ள தனியார் தொழிற்சாலையொன்றில் பொது முகாமையாளராக கடமையாற்றிய ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் பெயர் பிரியந்த குமார என அந்த இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவோர் அவலமான சம்பவம் என பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சர் ஹுஸ்மான் புஸ்டார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் சட்டத்தை கையில் எடுத்துள்ளமை கண்டிக்கத்தக்க விடயம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த இலங்கை பிரஜை கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இந்த விடயம் தொடர்பில் அறிவதற்காக, பாகிஸ்தானின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற வைஸ் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரமவை தொடர்புகொள்ள முயற்சித்த போதிலும், உயர்ஸ்தானிகர் கூட்டமொன்றில் இருப்பதாக அலுவலக அதிகாரி ஒருவர் கூறினார்.

சம்பவம் தொடர்பில் சரியான தகவல்கள் கிடைக்கப்பெற்றதும் இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்