காத்தான்குடி மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடையே தொடர்பு

காத்தான்குடி மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடையே தொடர்பு

காத்தான்குடி மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடையே தொடர்பு

எழுத்தாளர் Staff Writer

03 Dec, 2021 | 8:04 pm

Colombo (News 1st) மட்டக்களப்பு – காத்தான்குடி பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இரண்டு இடங்களில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களுக்கும் ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் தொடர்புள்ளமை விசாரணைகளூடாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

காத்தான்குடியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பின் போது பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்களும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது பயன்படுத்தப்பட்ட வெடிபெருட்களும் ஒரே மாதிரியானவை என அரச இரசாயன பகுப்பாய்வினூடாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

2018 ஆம் ஆண்டு பெப்ரவரி 6 ஆம் திகதி காத்தான்குடியிலுள்ள வீடொன்றிலும் அதே ஆண்டு பெப்ரவரி 12 ஆம் திகதி காத்தான்குடியில் இருந்த அலுவலகம் ஒன்றிலும் குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னர் பல விடயங்கள் கண்டறியப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதற்கமைய, தற்கொலை குண்டுதாரியான மொஹமட் காசிம் மொஹமட் ரில்வான் என்பவரால் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி, குண்டுத் தாக்குதலுக்கான ஒத்திகைக்கு தேவையான வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

இதேவேளை, இந்தியாவில் கைது செய்யப்பட்ட எஸ்.சம்சுதீன் என்ற இந்திய பிரஜையின் கையடக்க தொலைபேசியிலிருந்து பெறப்பட்ட, முஹைதீன் போ அல்லா என்பவரின் WhatsApp கணக்கினூடாக இலங்கையிலுள்ள 702 பேருடன் தொடர்புகள் பேணப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் ஒரு சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையூடாக, மட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல் சஹ்ரானின் குழுவினரால் நடத்தப்பட்டமை பயங்கரவாத விசாரணைப் பிரிவினரின் தீவிர விசாரணைகளூடாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (02) அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்டுள்ள நபர்களை உறுதி செய்துகொள்வதற்காக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்