தங்கம் புதைக்கப்பட்ட இடத்தில் அகழ்வுப் பணிகள்

முல்லைத்தீவில் தங்கம் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இடத்தில் இன்று (02) அகழ்வுப் பணிகள் ஆரம்பம்

by Staff Writer 02-12-2021 | 2:12 PM
Colombo (News 1st) முல்லைத்தீவு - சுதந்திரபும் பகுதியில் தங்கம் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இடத்தில் இன்று (02) அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இன்று பகல் 02 மணிக்கு அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படுவதாக பொலிஸார் கூறினர். முல்லைத்தீவு நீதவான், பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட துறைசார் அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படவுள்ளது. இதேவேளை, ​போர் சூழலில் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் புதைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை இரகசியமாக தோண்டியெடுப்பதற்கு முயற்சித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணையை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் ஆரம்பித்துள்ளனர். போர் காலத்தில் தமிழீழ விடுதலை புலிகளால் புதுக்குடியிருப்பு பகுதியில் புதைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கம் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய கடந்த மாதம் 25 ஆம் திகதி தோண்டியெடுக்கப்படவிருந்தது. எனினும், மாவீரர்கள் வாரம் காரணமாக அந்த அகழ்வுப் பணிகள் இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 23 ஆம் திகதி குறித்த பகுதியில் நிலத்தைத் தோண்டுவதற்கு சிலர் முயற்சித்துள்ளனர். இந்த குற்றச்சாட்டு சுமத்தப்படுகின்றவர்களில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் இணைப்புச் செயலாளர் ஒருவரும் அடங்குகின்றார். விசாரணைகள் நிறைவுபெறும் வரை குறித்த உத்தியோகத்தரின் பணியை இடைநிறுத்துமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார். சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார்.