தரமற்ற சீன உரத்தை ஏற்றிய கப்பல் தொடர்ந்தும் இலங்கை கடற்பரப்பில்...

by Staff Writer 02-12-2021 | 2:17 PM
Colombo (News 1st) பாதகமான நுண்ணுயிர்கள் அடங்கியமை இரு தடவைகள் உறுதி செய்யப்பட்ட சீனாவின் உரத்தை ஏற்றிய ஹிப்போ ஸ்பிரிட் (Hippo Spirit) கப்பல் இன்னமும் இலங்கை கடற்பரப்பில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச கப்பல் பயணத் தரவுகளுக்கு அமைய இந்த கப்பல் பேருவளையிலிருந்து சுமார் 12.4 கடல் மைல் தொலைவில் நங்கூரமிடப்பட்டுள்ளது. இந்த கப்பல் கடந்த செப்டம்பர் 22 ஆம் திகதி சீனாவின் சிந்தாவோ துறைமுகத்தில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு செல்வதாக அறிவித்து பயணத்தை ஆரம்பித்தது. எனினும் இடைநடுவே தமது போக்குவரத்து மார்க்கத்தை மாற்றிய கப்பல், சிங்கப்பூருக்கு சென்றதுடன் சர்வதேச கப்பல் போக்குவரத்து தரவுகளுக்கு அமைய இறுதியாக ஒப்டோபர் 13 ஆம் திகதி கப்பல் மலாக்கா நீரிணையில் காணப்பட்டது. அதன் பின்னர் ஹிப்போ ஸ்பிரிட்ஸ் கப்பல் தொடர்பிலான தகவல் பதிவாகவில்லை. பின்னர் திடீரென யால சரணாலயத்தை அண்மித்த ஹம்பந்தோட்டை கடற்பரப்பில் ஒக்டோபர் 24 ஆம் திகதி இந்த கப்பலின் பெயர் செய்யோ எக்ஸ்ப்லோரர் என மாற்றப்பட்ட நிலையில் காணப்பட்டது. ஹம்பாந்தோட்டை ஆழ்கடல் பகுதியை நோக்கி இந்தக் கப்பல் பயணிப்பதை அவதானிக்க முடிந்ததுடன் பின்னர் கப்பல் தொடர்பிலான தொடர்பு மீண்டும் அற்றுப்போனது. இதேவேளை, ஒக்டோபர் 31 ஆம் திகதி கப்பலின் தரவுகள் புதுப்பிக்கப்பட்டிருந்ததுடன் ஹம்பாந்தோட்டையில் 24 ஆம் திகதி காணப்பட்ட கப்பலின் பெயர் ஹிப்போ ஸ்பிரிட் என அந்த தகவல்கள் புதுப்பிக்கப்பட்டிருந்தன. பின்னர் கொழும்பு துறைமுகத்தில் உணவு வகைகளை பெற்றுக்கொண்ட இந்த கப்பல் தொடர்ந்தும் களுத்துறை கடற்பரப்பில் காணப்படுகிறது. சீன உரத்தில் பாதகமான பக்டீரியா உள்ளதாக தேசிய தாவர தடுப்புக் காப்புச் சேவை முதற்தடவையாக செப்டம்பர் 09ஆம் திகதி அறிவித்தது. இந்த உரத்தை கொள்வனவு செய்வதற்கான கடன் கடிதங்கள் செப்டம்பர் 17 ஆம் திகதி திறக்கப்பட்டமை இரு தரப்பினருக்கும் இடையில் பரிமாறப்பட்ட ஆவணங்கள் மூலம் உறுதியாகின்றது. அதற்கமைய, உரத்தில் பாதகமான பக்டீரியா உள்ளதாக தேசிய தாவர தடுப்புக் காப்புச் சேவை அறிவித்திருந்த நிலையில் கடன் கடிதங்கள் திறக்கப்பட்டமை சந்தேகத்திற்கு வழிவகுக்கின்றது. இதேவேளை, செப்டம்பர் 12 ஆம் திகதி சீன நிறுவனம் இலங்கை அதிகாரிகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது. இலங்கை கோரும் தரத்திற்கு எவராலும் சேதனப் பசளையை வழங்க முடியாது எனவும் தேவையெனில் சில பக்டீரியாக்களின் அளவை மாத்திரம் குறைக்க முடியும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான வழக்கு கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகின்றது. இந்தக் கப்பல் இன்னமும் #SeaOfSriLanka எனப்படும் இலங்கை கடலில் என்ன செய்கின்றது?