by Staff Writer 02-12-2021 | 7:39 PM
Colombo (News 1st) இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஒருநாள் போட்டியைப் போன்ற நிலைக்கு மாறியுள்ளது.
போட்டியில் இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 328 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது நான்காம் நாள் ஆட்டநேரம் முடிவுக்கு வந்தது. அதற்கமைய, கைவசம் 2 விக்கெட்கள் இருக்க, இலங்கை அணி 279 ஓட்டங்களால் முன்னிலை வகித்தது.
காலி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி கடந்த 29 ஆம் திகதி ஆரம்பமானது. முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்ற நிலையில், தொடரை கைப்பற்றும் எதிர்பார்ப்புடன் இந்த போட்டியில் களமிறங்கியுள்ளது. முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக பல மணித்தியாலங்கள் தாமதமாகவே ஆரம்பிக்கப்பட்டது. இதனால் முதல் நாளில் 34 ஓவர்களையே வீச முடிந்தது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி இரண்டாம் நாள் பகல் வேளையில் 204 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. பெத்தும் நிஸ்ஸங்க 73 ஓட்டங்களையும், அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 42 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.
பந்துவீச்சில் வீராசாமி பெர்மால் 35 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும், ஜொமெல் வொரிக்கன் 50 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
பதிலளித்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 69 ஓட்டங்களுடன் மூன்றாம் நாளில் ஆட்டத்தை தொடர்ந்தது.
அணித்தலைவர் கிரெய்க் பிரத்வைட் ( Kraigg Brathwaite) 72 ஓட்டங்களையும், ஜேர்மின் பிளக்வூட் (Jermaine Blackwood ) 44 ஓட்டங்களையும் பெற்றனர். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முதல் இன்னிங்ஸ் 253 ஓட்டங்களுடன் முடிவுக்கு வந்தது.
ரமேஷ் மென்டிஸ் 70 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களையும், லசித் எம்புல்தெனிய, பிரவீன் ஜயவிக்ரம ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
26 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி ஆரம்பத்தில் விக்கெட்களை இழந்தாலும் தனஞ்சய டி சில்வா 153 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருக்கின்றார். இது அவருக்கு எட்டாவது டெஸ்ட் சதமாகும். பெத்தும் நிஸ்ஸங்க 66 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.
அந்த வகையில், கடைசி நாள் ஆட்டம் ஒருநாள் போட்டி போன்ற தன்மைக்கு மாறியுள்ளது. ஐந்தாம் நாளில் இலங்கை அணி ஆரம்பித்திலேயே கைவசமுள்ள 2 விக்கெட்களையும் இழக்கும் பட்சத்தில், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்படும்.
அதாவது இலங்கை அணி தற்போது 279 ஓட்டங்களால் முன்னிலை வகிப்பதால், மேற்கிந்தியத் தீவுகளுக்கு பெரும்பாலும் 300 ஓட்டங்களுக்குள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்படுமானால், இந்தப் போட்டியில் ஒருநாள் போட்டியை போன்ற சுவாரஸ்யமான முடிவுகளை எதிர்பார்க்க முடியும்.
டெஸ்ட் போட்டியைப் பொறுத்தவரை ஒரு நாளில் 90 ஓவர்கள் வீச வேண்டும். முடிவு கிடைக்கக்கூடிய சந்தர்ப்பம் இருக்கும் தருணத்தில் மேலும் சில ஓவர்களை வீசவும் வாய்ப்புள்ளது. அந்த வகையில், இந்தப் போட்டியில் முதல் நாளில் 50 ஓவர்களுக்கு மேல் தடைப்பட்டதால், கடைசி நாளில் நேரம் கிடைக்குமானால் 90 ஓவர்களுக்கு மேல் பந்துவீச வாய்ப்பு கிடைக்கலாம்.
ஐந்தாம் நாள் ஆட்டம் இலங்கையின் பந்து வீச்சையும் மேற்கிந்தியத் தீவுகளின் துடுப்பாட்டத்தையும் பரிசீலிக்கும் ஒன்றாக அமைய வாய்ப்புள்ளது. அவ்வாறு இடம்பெறும் பட்சத்தில், இந்தப் போட்டி டெஸ்ட் எனும் தன்மையிலிருந்து விலகி ஒருநாள் போட்டியாகவே நடைபெறும் என்பதில் ஐயமில்லை.