அசாத் சாலி அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிப்பு

by Staff Writer 02-12-2021 | 11:19 AM
Colombo (News 1st) முன்னாள் ஆளுநர் அசாத் சாலி அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். இனங்கள், மதங்களுக்கு இடையில் முரண்பாட்டை தோற்றுவித்தல் மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சித்த குற்றச்சாட்டில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் வௌியிட்ட கருத்து தொடர்பில் அசாத் சாலி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கடந்த மார்ச் மாதம் 16 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். பயங்கரவாத தடைச்சட்டம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதேவேளை, அசாத் சாலியை கைது செய்வதற்கான முறைப்பாட்டை முன்வைத்த பாராளுமன்ற உறுப்பினர்களான மொஹமட் முஸாம்மில், நிமல் பியதிஸ்ஸ மற்றும் காமினி வலேபொட ஆகியோரை பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினராக பொறுப்புடன் செயற்படாது, வெறுப்புணர்வுடன் முன்வைத்த முறைப்பாட்டினால் தமது சேவை பெறுநர் பாதிப்பிற்குள்ளாகியதாக அசாத் சாலி  தரப்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன முன்வைத்த வாதத்தினை அடிப்படையாகக் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்காக குற்றவியல் தண்டனை சட்டக்கோவைக்கு அமைய நட்டஈடு பெற்றுக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி மன்றில் தெரிவித்ததற்கு அமைய, முறைப்பாட்டாளர்களை மன்றில் ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.