சீனாவை விஞ்சிய அமெரிக்கா

பிளாஸ்டிக் கழிவு வௌியேற்றத்தில் சீனாவை விஞ்சிய அமெரிக்கா

by Bella Dalima 02-12-2021 | 3:34 PM
Colombo (News 1st) உலகில் அதிக பிளாஸ்டிக் கழிவுகளை அமெரிக்காவே வௌியேற்றுவதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. 2016 இல் அமெரிக்கா 42 மில்லியன் மெட்ரிக் தொன் பிளாஸ்டிக் கழிவுகளை வௌியேற்றியுள்ளது. இது சீனாவுடன் ஒப்பிடுகையில் இரு மடங்கு அதிகம் என்பதுடன், ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருடாந்தம் ஒவ்வொரு அமெரிக்கரும் தலா 130 கிலோகிராம் பிளாஸ்டிக் கழிவுகளை வௌியேற்றுகின்றனர். இந்த பட்டியலில் தென் கொரியா இரண்டாவது இடத்தில் உள்ளதுடன், வருடாந்தம் தென் கொரியர்கள் தலா 88 கிலோ பிளாஸ்டிக் கழிவை வௌியேற்றுகின்றனர். கடந்த வருடத்தில் சட்டமாக்கப்பட்ட 'கடல் வளத்தை பாதுகாப்போம் 2.0' என்ற திட்டத்தின் ஒரு கட்டமாக காங்கிரஸினால் கொண்டுவரப்பட்ட ஆணையின் கீழ் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 1966 இல் 20 மில்லியன் மெட்ரிக் தொன்னாக காணப்பட்ட சர்வதேச பிளாஸ்டிக் உற்பத்தி 2015 இல் 381 மில்லியன் மெட்ரிக் தொன்னாக அதிகரித்துள்ளது. ஆரம்பத்தில் கடல்சார் கழிவுகள், சமுத்திரத்துடன் தொடர்புடைய கழிவுகளினால் பிளாஸ்டிக் கடலில் சேர்வதாக அனுமானிக்கப்பட்டிருந்தாலும், நிலத்தில் சேரும் பிளாஸ்டிக் ஆறுகள் மற்றும் பிற காரணிகளால் இறுதியாக கடலில் சேர்கின்றமை உறுதியாகியுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான கடல்வாழ் உயிரினங்கள் எளிதில் பாதிக்கப்படுகின்றன.