by Staff Writer 02-12-2021 | 7:57 AM
Colombo (News 1st) கடந்த சில தினங்களாக எரிவாயு கசிவினால் வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ள பகுதிகளுக்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொள்ள, எரிவாயு சிலிண்டர் தீப்பற்றுதல் மற்றும் வெடிப்பது குறித்து ஆராய்ந்து தீர்வுகளை கண்டறிவதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு தீர்மானித்துள்ளது.
மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் நேற்று (01) மாலை குறித்த குழு கூடிய போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கண்காணிப்பு விஜயத்தின் போது, விஞ்ஞான ரீதியிலான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.
எரிவாயு கசிவு ஏற்படும் போதும், எரிவாயு கசிவை தடுப்பதற்கும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் அடங்கிய கோவை இன்று (02) வௌியிடப்படவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
எரிவாயு சேர்மானத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது தொடர்பிலும் ஆராயப்படவுள்ளதாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவின் பிரதிநிதி குறிப்பிட்டார்.
இந்த குழுவின் ஆய்வறிக்கை எதிர்வரும் இரு வாரங்களில் ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு வெடிப்பு தொடர்பான விசாரணை மற்றும் தீர்வுகளை ஆராய்வதற்காக மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சாந்த வல்பொல தலைமையில் ஜனாதிபதியால் குழு நியமிக்கப்பட்டுள்ளது.