by Staff Writer 01-12-2021 | 7:00 PM
Colombo (News 1st) இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
கொழும்பு ஷங்ரில்லா ஹோட்டலில் நேற்றிரவு இந்த சந்திப்பு நடைபெற்றதாக பிரதமரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
COVID-19 தொற்று நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட துரித செயற்பாட்டிற்கு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் இதன்போது பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமிய நாடுகளுடனான இருதரப்பு உறவை தொடர்ந்து பேணுதல் மற்றும் பரஸ்பர செயற்பாடுகள், திட்டங்கள் ஊடாக இலங்கையின் பொருளாதார மேம்பாட்டிற்கு பங்களிப்பு செய்தல் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பினை தொடர்ச்சியாக எதிர்பார்ப்பதாக இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கையின் 15 தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
ஓமான், பாலஸ்தீனம், குவைத், சவுதி அரேபியா, மலேசியா, கட்டார், துருக்கி, ஈரான், லிபியா, ஐக்கிய அரபு இராச்சியம், இந்தோனேசியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கான இலங்கை தூதுவர்கள் மற்றும் மாலைத்தீவு, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி அந்நாடுகளின் இலங்கை உயர்ஸ்தானிகர்கள் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.