by Bella Dalima 30-11-2021 | 5:12 PM
Colombo (News 1st) நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய வானிலையால் 10,947 குடும்பங்களை சேர்ந்த 40,837 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இருவர் உயிரிழந்துள்ளனர்.
மழையுடனான வானிலையால் மன்னாரில் 319 குடும்பங்களை சேர்ந்த 1,146 பேர் 15 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் பிரதேச செயலகத்திற்குட்பட்ட தலைமன்னார், பேசாலை, தாழ்வுபாடு, தோட்டவௌி, எழுத்தூர், காந்திபுரம் பகுதிகளை சேர்ந்தவர்களே தொடர்ந்தும் முகாம்களில் தங்கியுள்ளனர்.
வீடுகளில் தொடர்ந்தும் வெள்ளம் தேங்கியுள்ளமையினால் இவர்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, வௌ்ள நிலைமையினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் கிராமத்திற்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பிலிருந்து 75 குடும்பத்தினர் வசிக்கின்ற சுதந்திரபுரம் பகுதி வரையிலான பகுதி வௌ்ளத்தில் மூழ்கியுள்ளது. இதன் காரணமாக குறித்த பகுதியூடாக பயணிப்பவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
யாழ்ப்பாணம் - வேலணை பிரதேச செயலகத்திற்குட்பட்ட புங்குடுதீவு 5 ஆம் வட்டாரம் 25 வீட்டுத்திட்ட குடியிருப்பு பகுதியும் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் 25 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 6 குடும்பங்களை சேர்ந்தவர்கள் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.
வவுனியா - ஓமந்தை கலநல சேவைகள் நிலையத்திற்குட்பட்ட செட்டியூர்குளம் நேற்று (29) மாலை உடைப்பெடுத்துள்ளது. குளத்தை அண்மித்த சுமார் 50 ஏக்கரில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கமக்காரர் அமைப்பின் உதவியுடன் நீர் வழிந்தோடும் பகுதி சீர்செய்யப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
பலாங்கொடை - கணத்திரியன் ஆறு பெருக்கெடுத்தமையினால் பலாங்கொடை - ஹட்டன் பிரதான வீதியின் கணத்திரியன்வெல பகுதி நீரில் மூழ்கியுள்ளது. அத்துடன், குறித்த பகுதியிலுள்ள வயல் நிலங்களும் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன.
எல்லவிலிருந்து பசறைக்கு செல்லும் பிரதான வீதியின் நமுனுகுல 16 ஆம் கட்டை பகுதியில் சரிந்து வீழ்ந்த கற்பாறைகளால் குறித்த பகுதியூடான போக்குவரத்து தொடர்ந்தும் தடைப்பட்டுள்ளது. இதன் காரணமாக கற்பாறைகளை அகற்றும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.