மின் விநியோகம் தடைப்பட்டதன் பின்னணியில் நாசகார செயற்பாடு?

மின் விநியோகம் தடைப்பட்டதன் பின்னணியில் நாசகார செயற்பாடு?

எழுத்தாளர் Staff Writer

30 Nov, 2021 | 10:13 pm

Colombo (News 1st) எரிவாயு பிரச்சினை தொடர்பில் தகவல்கள் வௌியாகி வரும் நிலையில், நேற்றைய தினம் (29) மாலை 3 மணி நேரம் நாட்டின் 25 வீதமான பகுதிகளுக்கான மின்சார விநியோகம் தடைப்பட்டது.

இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் M.M.C. பெர்னாண்டோ தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையிலேயே மின்சார விநியோகம் தடைப்பட்டது.

கொத்மலையில் உப மின் நிலையத்தில் இருந்து பியகம உப மின் நிலையத்திற்கு மின்சாரத்தை கொண்டு செல்லும் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நேற்று மாலை 6.15 மணியளவில் பல பகுதிகளிலும் மின்சார விநியோகம் தடைப்பட்டது.

இந்த கோளாறு காரணமாக மூன்று நீர் மின் நிலையங்களுக்கான மின் விநியோகமும் தடைப்பட்டதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் M.M.C.பெர்னாண்டோ தெரிவித்தார்.

மூன்று மணித்தியாலங்களில் நிலைமையை வழமைக்குக் கொண்டு வருவதற்கு மின்சார சபை நடவடிக்கை மேற்கொண்டது.

இந்த கட்டமைப்பில் எவ்வாறு இவ்வாறான தன்னியக்க கோளாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இது ஒரு நாசகார செயலா என்பது தொடர்பில் அறிந்துகொள்வதற்கான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸாரின் உதவியை நாடியுள்ளதாகவும் மின்சார சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கை இன்று 6 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.

முறையற்ற மற்றும் சட்டவிரோதமான New Fortress LNG கொடுக்கல் வாங்கலை முன்னெடுக்காதிருத்தல் ,
தற்போது முன்னெடுக்கப்படும் LNG விலைமனு கோரல் நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லல் உள்ளிட்ட 6 கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

இதேவேளை, தமது சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை நாளை (01) முதல் இரண்டாவது கட்டத்திற்கு நகர்த்த தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்தது.

இரண்டாவது கட்டத்தில் அவசர நிலைகளிலும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்