காணாமற்போன கான்ஸ்டபிள் தொடர்பில் தகவல் இல்லை; தேடுதல் தொடர்கிறது

காணாமற்போன கான்ஸ்டபிள் தொடர்பில் தகவல் இல்லை; தேடுதல் தொடர்கிறது

எழுத்தாளர் Bella Dalima

30 Nov, 2021 | 6:32 pm

Colombo (News 1st) ஹட்டன் – நல்லதண்ணி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய நிலையில் காணாமற்போன பொலிஸ் கான்ஸ்டபிளை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நல்லதண்ணி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய ஆனந்த சமரநாயக்க என்ற கான்ஸ்டபிள் கடந்த 27ஆம் திகதி மாலை முதல் காணாமற்போயுள்ளார்.

அன்றைய தினம் கடமையை நிறைவு செய்து வீடு செல்வதாக நல்லதண்ணி பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்து விட்டு சென்றிருந்த நிலையில் அவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

55 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே காணாமல் போயுள்ளார். கெலிஓயா – குருதெனிய பகுதியிலேயே காணாமல் போன பொலிஸ் கான்ஸ்டபிள் வசித்து வந்துள்ளார்.

காணாமல் போன பொலிஸ் கான்ஸ்டபிள் 36 வருடங்களாக இலங்கை பொலிஸில் சேவையாற்றியுள்ளார். அவரின் மனைவி நேற்று முன்தினம் (28) தனது கணவரை காணவில்லையென பேராதனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனிடையே, கெலிஓயா ஓடையில் அவர் வீழ்ந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று (29) தேடுதல் முன்னெடுக்கப்பட்டது. பேராதனை பொலிஸார் சுழியோடிகளை ஈடுபடுத்தி தேடுதலை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது, காணாமற்போன கான்ஸ்டபிளின் கைப்பை கிழிந்த நிலையில் கெலிஓயா கல்கமுவ ஓடைக்கு அருகாமையிலிருந்து மீட்கப்பட்டது.

மீட்கப்பட்ட கைப்​பையில் சந்தேகத்திற்கிடமான எதுவும் இருக்கவில்லை.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்