உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த உறுதியான தகவல் எதுவும் முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை – அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த உறுதியான தகவல் எதுவும் முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை – அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த உறுதியான தகவல் எதுவும் முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை – அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவர்

எழுத்தாளர் Staff Writer

30 Nov, 2021 | 8:51 am

Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படும் வரை, அத்தகைய தாக்குதல் தொடர் நடத்தப்படலாமென்ற உறுதியான புலனாய்வு தகவலொன்று, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கப்பட்டிருக்கவில்லை என அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான நிலந்த ஜயவர்தன மன்றில் தெரிவித்துள்ளார்.

கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் ஐந்தாவது நாளாகவும் நேற்று (29) சாட்சியமளித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இந்தத் தாக்குதல்கள் தொடர்பில் அப்போதைய பிரதமருக்கோ, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட அரசியல் அதிகாரிகளுக்கோ, அப்போதைய பொலிஸ்மா அதிபருக்கோ உறுதிப்படுத்தப்பட்ட புலனாய்வு தகவலாக அறிவிக்கப்பட்டிருக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட 855 குற்றச்சாட்டுக்களின் கீழ், முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாணடோ ஆகியோருக்கு எதிரான வழக்கு, கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் நேற்று (29) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன ஐந்தாவது நாளாகவும் சாட்சி வழங்கியதுடன், தற்போதைய பொலிஸ்மா அதிபர் C.D. விக்ரமரத்னவும் சாட்சி வழங்கினார்.

புலனாய்வுப் பிரிவினர் வழங்கும் தகவல்களை ஆராய்ந்து இவ்வாறான பேரழிவுகளில் இருந்து நாட்டைக் காப்பாற்ற, பொலிஸ்மா அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இதன்போது அவர் கூறினார்.

அரச புலனாய்வு பிரிவின் ஊடாக வழங்கப்படும் தகவல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு அவை உறுதிப்படுத்தப்பட்ட புலனாய்வு தகவல்களாக இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை எனவும் அவை நூற்றுக்கு நூறு வீதம் உண்மையானவையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் சுட்டிக்காட்டிய பொலிஸ்மா அதிபர் C.D. விக்ரமரத்ன, புலனாய்வு பிரிவினூடாக கிடைக்கும் தகவல்கள் மீது நம்பிக்கை வைத்து உடனடியாக செயற்பட வேண்டும் எனவும் கூறினார்.

பொலிஸ்மா அதிபர் என்பவர் சம்பளத்தை பெறும் அரச அதிகாரி அன்றி, நாட்டினுள் சட்டத்தையும் அமைதியையும் பேணவேண்டிய தேசிய பாதுகாப்பு தொடர்பில் விசேட பொறுப்பு வழங்கப்பட்ட ஒருவர் என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

புலனாய்வு பிரிவினரால் வழங்கப்படும் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து, அவர் தனிப்பட்ட முறையில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென பொலிஸ்மா அதிபர் C.D. விக்ரமரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

நாமல் பலல்லே, ஆதித்ய பட்டபெந்திகே மற்றும் மொஹமட் இஸர்தீன் ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் இந்த வழக்கு, அடுத்த வருடம் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்