பயண தடையை நீக்க கோரும் தென்னாபிரிக்க ஜனாதிபதி

பயண தடையை நீக்குமாறு தென்னாபிரிக்க ஜனாதிபதி கோரிக்கை

by Staff Writer 29-11-2021 | 5:30 PM
Colombo (News 1st) ஒமிக்ரோன் (Omicron) பிறழ்வு காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள பயணத் தடைகளை உடனடியாக நீக்குமாறு தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசா, ஏனைய நாடுகளை கேட்டுக் கொண்டுள்ளார். இந்த பயணத் தடை காரணமாக தமது அரசு ஏமாற்றம் அடைந்ததுள்ளதாக அவர் கூறியுள்ளார். அத்துடன், உலக நாடுகள் பிறப்பித்துள்ள பயணக் கட்டுப்பாடுகள் நியாயமற்றவை எனவும் பொருளாதார ரீதியாக தாம் பாதிக்கப்படுவதற்கு முன்னர் அந்த தடைகளை உடனடியாக நீக்குமாறும் தென்னாபிரிக்க ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். புதிய பிறழ்வு பரவுவதை தொடர்ந்து பிரித்தானியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அத்துடன் இந்த பிறழ்வு குறித்து அதிகமாக கவனம் செலுத்த வேண்டும் எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், நேற்று (28) ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்திருந்த ஜனாதிபதி சிறில் ரமபோசா, உலக நாடுகள் திடீரென பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளமையால் தாம் மேலும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார். கொரோனா தடுப்பூசி ஏற்றப்படுவதில் காணப்படும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வை காண்பதை புதிய பிறழ்வு உணர்த்துவதாக தென்னாபிரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார். ஒமிக்ரோன் பிறழ்வு தற்போது பிரித்தானியா, ஜெர்மனி, அவுஸ்திரேலியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.