by Staff Writer 27-11-2021 | 4:05 PM
Colombo (News 1st) தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள Omicron கொரோனா பிறழ்வு போன்ற புதிய பிறழ்வுகள் இலங்கையிலும் பரவக்கூடும் என சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டிருந்தாலும், புதிய வைரஸிற்கு எதிரான வீரியம் குறைவாகவே காணப்படுவதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் ரஞ்சித் பட்டுவன்துடாவ சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுவரை கிடைத்த தரவுகளின் பிரகாரம், Omicron எனும் புதிய பிறழ்வு மிகவும் ஆபத்தானது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்று (27) நள்ளிரவு முதல் மறு அறிவித்தல் வரை 6 ஆபிரிக்க நாடுகளின் பயணிகளுக்கு நாட்டிற்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்கா, போட்ஸ்வானா, லெசதோ, நமீபியா, சிம்பாப்வே, சுவாசிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து வருகை தரும் பயணிகளுக்கு நாட்டிற்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்படுவதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
தென்னாபிரிக்காவில் புதிய கொரோனா பிறழ்வான Omicron அடையாளங்காணப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இன்று நாட்டிற்கு வருகை தந்த பயணிகளை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மசேன தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நாட்டில் மேலும் 26 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ,232 ஆக அதிகரித்துள்ளது.
இந்த மரணங்கள் நேற்று முன்தினம் (25) பதிவானவையென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அடுத்த மாதம் முதல், வாராந்தம், 3 மில்லியன் பைசர் தடுப்பூசிகளை கொண்டு வருவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
டிசம்பர் மாத இறுதியில் நாட்டின் தடுப்பூசி செயற்றிட்டத்திற்கு தேவையான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதே இதன் நோக்கம் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ளார்.