எரிவாயு கசிவினால் வெடிப்பு: அம்பாறையிலும் சம்பவம்

by Staff Writer 27-11-2021 | 7:11 PM
Colombo (News 1st) நாட்டின் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் தரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் தற்போது சர்ச்சை ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக இடம்பெற்ற எரிவாயு கசிவினால் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவங்களினாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அம்பாறை - சாய்ந்தமருது 16 ஆம் பிரிவில் வீடொன்றில் சமையல் எரிவாயு கசிவினால் கேஸ் அடுப்பு வெடித்து தீ பரவியுள்ளது. வீட்டிலிருந்தவர்கள் உடனடியாக நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். நேற்று (26) இரவு 8.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. எரிவாயு கசிவு ஏற்பட்டால் மாத்திரமே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறக்கூடும் என பிரதான இரண்டு சமையல் எரிவாயு நிறுவனங்களினதும் விசேட நிபுணர்கள் தெரிவித்தனர். எரிவாயு கலப்பு அல்லது சிலிண்டரின் தரத்தை குறைக்கும் செயற்பாட்டில் தமது நிறுவனம் ஒருபோதும் ஈடுபடாது என அவர்கள் உறுதிப்படுத்தினர்.