எரிவாயு பிரச்சினைக்கு தெரிவுக்குழுவை நியமித்து விசாரிக்குமாறு சஜித் பிரேமதாச கோரிக்கை

எரிவாயு பிரச்சினைக்கு தெரிவுக்குழுவை நியமித்து விசாரிக்குமாறு சஜித் பிரேமதாச கோரிக்கை

எழுத்தாளர் Bella Dalima

27 Nov, 2021 | 7:51 pm

Colombo (News 1st) நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதால், அது குறித்து ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

நுகர்வோர் வரிசையில் நின்று கொள்வனவு செய்து வீட்டிற்கு கொண்டு செல்லும் சமையல் எரிவாயு சிலிண்டரின் பாதுகாப்பு தொடர்பில் இன்று பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கலவையை மாற்றினால் சிலிண்டருக்குள் அழுத்தம் அதிகரித்து வெடிப்பு ஏற்படும் ஆபத்தான நிலைமை உருவாகும் என எரிசக்தி நிபுணர் நிமல் டி சில்வா தெரிவிக்கும் நிலையில், கலவையில் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை என எரிவாயு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

கலவை விடயத்தில் பிரச்சினை இல்லை என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கூறினாலும் அதில் திருப்தியடைய முடியாது என சஜித் பிரேமதாச கூறினார்.

இந்த விடயம் குறித்து தௌிவான சாட்சியங்களுடன் உரிய பதிலை நாட்டு மக்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாகக் கூறிய அவர், எரிவாயு சிலிண்டரிலும் பாதுகாப்பு இல்லாத நாடாக இலங்கை உருவாகியுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

அரசியல் நிகழ்ச்சி நிரல்களை ஓரங்கட்டிவிட்டு, மக்களின் உயிரை கருத்திற்கொண்டு, குறைந்தபட்சம் பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றையாவது நியமித்து உண்மைத் தகவல்களை வௌிக்கொண்டு வருமாறு சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல், அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண, இரண்டு எரிவாயு நிறுவனங்களினதும் மாதிரிகளை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு அனுப்பியுள்ளதாக குறிப்பிட்டார்.

இது தொடர்பான அறிக்கையை எதிர்வரும் திங்கட்கிழமை (29) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க தயாராகவுள்ளதாகவும் லசந்த அழகியவண்ண கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்