COVID தடுப்பிற்கு வில்லைகளை கொண்டுவர நடவடிக்கை

நடமாடும் சேவையூடாக Booster டோஸ்; COVID தடுப்பிற்கு வில்லைகளை கொண்டுவர நடவடிக்கை

by Staff Writer 26-11-2021 | 7:29 PM
Colombo (News 1st) கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை பெற்று மூன்று மாதங்கள் கடந்த 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் நடமாடும் சேவையூடாக Booster டோஸை ஏற்ற நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார். இரண்டாவது தடுப்பூசியை செலுத்தி ஒரு மாதம் கடந்த தொற்றா நோய்களால் பீடிக்கப்பட்டுள்ள 20 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் மூன்றாவது டோஸ் தடுப்பூசியை செலுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. புற்றுநோயாளர்கள், புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுபவர்கள், உறுப்பு மாற்று சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டவர்கள், இரத்தமாற்று செய்யப்பட்ட நோயாளர்கள், தொற்றா நோய் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த அனைவருக்கும் விசேட வைத்திய பரிந்துரைக்கமைய மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. உரிய சிகிச்சை நிலையங்களில் அல்லது சனிக்கிழமை நாட்களில் பிராந்திய சுகாதார சேவை நிலையங்களில் மூன்றாவது தடுப்பூசியை இவர்கள் பெற்றுக்கொள்ள முடியும். COVID நோயாளிகளுக்காக பிரித்தானியா உள்ளிட்ட சில நாடுகளில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் Molnupiravir Capsule-ஐ பெற்றுக்கொடுப்பது தொடர்பிலும் இன்று கலந்துரையாடப்பட்டுள்ளது. COVID தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டது போல் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் ஊடாக இந்த வில்லைகளையும் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமனவிற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. COVID பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு விரைந்து நடவடிக்கை எடுப்பது குறித்தும் கொவிட் ஒழிப்பு விசேட செயலணி கவனம் செலுத்தியுள்ளது.