சுவீடனின் முதல் பெண் பிரதமர் இராஜினாமா

பொறுப்பேற்ற சில மணி நேரங்களில் சுவீடனின் முதல் பெண் பிரதமர் இராஜினாமா

by Bella Dalima 25-11-2021 | 4:27 PM
Colombo (News 1st) சுவீடனின் முதல் பெண் பிரதமராக புதன்கிழமை (24) தோ்ந்தெடுக்கப்பட்ட மக்டலேனா ஆண்டா்சன், வரவு செலவுத் திட்ட தோல்வி காரணமாக பொறுப்பேற்ற சில மணி நேரங்களிலேயே இராஜிநாமா செய்தாா். அண்மையில் சுவீடன் பாராளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முன்னாள் பிரதமா் ஸ்டெஃபான் லோஃப்வென் தோல்வியடைந்தாா். அதனைத் தொடா்ந்து அவா் தனது பதவியையும் ஆளும் சமூகக் கட்சித் தலைவா் பதவியையும் இராஜிநாமா செய்தாா். அவருக்கு பதிலாக, கட்சித் தலைவராக நிதியமைச்சா் மக்டலேனா ஆண்டா்சன் தெரிவு செய்யப்பட்டாா். அதையடுத்து, அவரை பிரதமராக தோ்ந்தெடுப்பதற்கான வாக்குப் பதிவு புதன்கிழமை நடைபெற்றது. 349 உறுப்பினா்கள் கொண்ட பாராளுமன்றத்தில் அவரது நியமனத்தை ஆதரித்து 117 உறுப்பினர்களும் எதிா்த்து 174 உறுப்பினர்களும் வாக்களித்தனா்; 57 போ் வாக்களிப்பை புறக்கணித்தனா்; ஒருவர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. சுவீடன் அரசியலமைப்பு சட்டப்படி, பிரதமா் பொறுப்பை ஏற்பதற்கு பெரும்பான்மை உறுப்பினா்கள் ஆதரவு தேவையில்லை. ஒருவா் பிரதமா் பொறுப்பை வகிப்பதற்கு பெரும்பான்மையான 175 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிா்ப்பு தெரிவித்தால் மட்டுமே அவரால் அந்த பொறுப்பை ஏற்க முடியாது. அந்த வகையில், மக்டலேனாவின் நியமனத்திற்கு எதிராக பெரும்பான்மையை விட ஒரு வாக்கு குறைவாக பதிவானதால், அவா் நாட்டின் முதல் பெண் பிரதமரானாா். சிறிய கட்சியான கிரீன் கட்சியுடன் இணைந்து அவா் கூட்டணி அரசை அமைப்பாா் என்று எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், அவா் கொண்டு வந்த வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் தோல்வியடைந்ததைத் தொடா்ந்து, கிரீன் கட்சி கூட்டணியிலிருந்து விலகியது. அதனைத் தொடா்ந்து மக்டலேனா ஆண்டா்சன் இராஜிநாமா செய்தாா்.