பாராளுமன்ற உறுப்பினர் M.S.தௌபீக் வீட்டின் மீது தாக்குதல்

by Bella Dalima 23-11-2021 | 4:44 PM
Colombo (News 1st) திருகோணமலை - கிண்ணியா படகு விபத்தில் அறுவர் உயிரிழந்ததை அடுத்து, அங்கு பதற்ற நிலை நிலவுகின்றது. குறிஞ்சாக்கேணியில் இருந்து கிண்ணியாவை நோக்கி பயணித்த படகுப் பாதை கவிழ்ந்ததில் 4 மாணவர்கள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர். இதனால் ஆத்திரமுற்ற மக்கள் முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் M.S.தௌபீக்கின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். குறிஞ்சாக்கேணியில் இருந்து கிண்ணியாவிற்கு ஆற்றை ஊடறுத்து மக்கள் பயணிக்க நேரிடுகிறது. ஏற்கனவே இருந்த பாலம் உடைந்த நிலையில், மக்கள் படகுப் பாதையொன்றை போக்குவரத்திற்காக பயன்படுத்தி வந்தனர். இன்றும் காலை 7 மணியளவில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட சுமார் 30 பேரை ஏற்றிய பாதை குறிஞ்சாக்கேணியில் இருந்து கிண்ணியா நோக்கி பயணமானது. வறுமையாலும் பல்வேறு சவால்களாலும் பீடிக்கப்பட்டுள்ள பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு இத்தகையதோர் பேராபத்து நிகழப்போகின்றது என சற்றும் எதிர்பாராது பிள்ளைகளை வழியனுப்பி வைத்தனர். படகுப் பாதை கிண்ணியா நிலப்பரப்பை அண்மித்த நிலையில், பயணம் தலைகீழாக மாறியது. திடீரென படகுப் பாதை கவிழ அதிலிருந்தவர்கள் ஆற்றினுள் வீழ்ந்தனர். பிரதேச மக்கள் தங்களின் உயிரையும் துச்சமாகக் கருதி மாணவர்களையும் மூழ்கிய ஏனையவர்களையும் காப்பாற்ற முயன்றனர். கடினமான பிரயத்தனத்திற்கு மத்தியில் காப்பாற்றப்பட்ட 14 பேர் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். உயிரிழந்த 4 மாணவர்கள் உள்ளிட்ட 6 பேரது சடலங்களும் கிண்ணியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டன. தற்போது 11 மாணவர்கள் உள்ளிட்ட 19 பேர் கிண்ணியா வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். கவலைக்கிடமான நிலையில் சிறுமியொருவர் திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.