கனடா கூட்டத்தில் அமைதியின்மை: நாமல் ட்வீட்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கனடா கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டமை தொடர்பில் கவலையடைவதாக நாமல் ராஜபக்ஸ தெரிவிப்பு

by Staff Writer 23-11-2021 | 6:31 AM
Colombo (News 1st) கலந்துரையாடல் நிகழ்வொன்றில் பங்கேற்ற இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர்கள், புலம்பெயர் சமூகத்தினால் நடத்தப்பட்ட விதம் தொடர்பாக கவலையடைவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நாட்டை பிளவுபடுத்துவதன்றி கலந்துரையாடலும் ஒற்றுமையுமே முன்னோக்கிச் செல்வதற்கான வழிமுறை என்பதை புலம்பெயர் சமூகம் உணர வேண்டும் என நாமல் ராஜபக்ஸ ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமையாக ஒரே மேசையில் அமர்ந்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டியதை இந்த சம்பவம் வலியுறுத்துவதாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோர் நேற்று முன்தினம் கனடாவின் டொரன்டோவில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வொன்றில் பங்கேற்றிருந்தபோது அங்கு பிரவேசித்த சிலர் கூச்சலிட்டு நிகழ்விற்கு இடையூறு விளைவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.