by Staff Writer 23-11-2021 | 10:01 PM
Colombo (News 1st) விவசாய அமைச்சின் கிருமிநாசினி பதிவாளரை உடன் அமுலாகும் வகையில் பதவி நீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நான்கு வருடங்களுக்கு முன்னர் தடை விதிக்கப்பட்ட 5 வகையான கிருமிநாசினிகளுக்கான தடையை நீக்கி அதிவிசேட வர்த்தமானி வௌியிட்டமையால், களைநாசினி பதிவாளர் பதவி நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
நேற்று இரவு வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் கிருமிநாசினி பதிவாளர் கலாநிதி ஜே.ஏ சுமித்தினால் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் திகதி வௌியிடப்பட்டிருந்த 1894 ஆம் ஆண்டு நான்காம் இலக்க வர்த்தமானி இரத்து செய்யப்பட்டுள்ளது.
ஐந்து இரசாயன பொருட்களின் பெயர் குறிப்பிடப்பட்டு சில பிரதேசங்களில் பயன்பாடு மற்றும் விற்பனைக்கு 2014 ஆம் ஆண்டு வர்த்தமானியில் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதில் Glyphosate, Propanyl, Carbaryl, Clofiriphos and Carbofuran ஆகிய 5 இரசாயனங்கள் அடங்கியிருந்தன.
2014 ஆம் ஆண்டு வௌியிடப்பட்ட அந்த வர்த்தமானி 2018 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் திகதி திருத்தப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அந்த திருத்தத்தில் குறித்த பிரதேசங்களில் பயன்பாடு மற்றும் விற்பனை தடை செய்யப்பட்டுள்ள இரசாயனப் பொருட்களின் பட்டியலில் Glyphosate நீக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு என்றால் நேற்று மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் அர்த்தம் என்ன?
இது தொடர்பில் விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த டி சில்வாவிடம் வினவியபோது, தற்போது வௌியாகியுள்ள தகவல்களின் படி நேற்று தவறுதலான வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
2014 ஆம் ஆண்டு வர்த்தமானி தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனை கோரப்பட்டிருந்த போதிலும் அந்த ஆலோசனை கிடைத்த பின்னர் தாம் குறித்த வர்த்தமானியில் கையொப்பமிட்டதாக கிருமிநாசினி பதிவாளர் கலாநிதி ஜே.ஏ. சுமித் தெரிவித்தார்.
தமது செயற்பாட்டில் தவறு இல்லை என்பது அவரின் நிலைப்பாடு.
எனினும், 2018 ஆம் ஆண்டு வௌியிடப்பட்ட வர்தமானியை கவனத்திற்கொள்ளாது 2014 ஆம் ஆண்டு வர்த்தமானி எதற்காக இரத்து செய்யப்பட்டது?