by Staff Writer 23-11-2021 | 9:51 AM
Colombo (News 1st) இலங்கையர்களின் வாழ்வில் வௌ்ளமும் மண்சரிவும் ஒன்றிப்போயுள்ளன.
அவ்வாறான அனர்த்தங்களிலிருந்து மீள்வது குறித்து மன்னார் - நானாட்டானில் மீட்புக் குழுவினர் பயிற்சியளித்தனர்.
வௌ்ளப் பேரிடரை எதிர்கொள்வதற்கு இந்தச் சமூகம் எப்போதும் தயாராகவே இருக்க வேண்டியுள்ளது.
அதனையே, APAD எனப்படும் அனர்த்த முகாமைத்துவத்திற்கான ஆசிய பசுபிக் கூட்டமைப்பு, மன்னார் - நானாட்டானில் முன்னெடுத்துள்ளது.
வரலாற்று முக்கியத்துவம் மிக்க மல்வத்து ஓயாவின் கிளை ஆறுகள் மன்னார் - நானாட்டானை செழிப்பாக்கின்றன.
அனுராதபுரத்தின் நீரேந்து பகுதிகளில் கிடைக்கும் மழை நீர், ஆற்றிலிருந்து கடலை நோக்கிப் பாய்வதால் வட மேற்கு கரையோரத்தில் வெள்ளம் ஏற்படுகின்றது.
விவசாயத்தையும் மீன்பிடியையும் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள நானாட்டான் மக்களுக்கு வேறு வழி இல்லாத நிலையில், அபாயத்தை அறிந்து வாழ வேண்டியுள்ளது.
வருடாந்தம் இங்கு உயிரிழப்புகள் பதிவாகின்றன. உடமைகளையும் இழக்க நேரிடுகின்றது.
ஏற்கனவே வாழ்வில் போராடும் இந்த மக்களுக்கு இது மேலும் சுமையை ஏற்படுத்துகிறது.
இதனால், சர்வதேச ரீதியில் பயிற்சி பெற்ற மீட்புக் குழுவொன்றை அனர்த்த முகாமைத்துவத்திற்கான ஆசிய பசுபிக் கூட்டமைப்பு நானாட்டானுக்கு அழைத்துச் சென்றது.
இந்தப் பகுதியைச் சேர்ந்த மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டர்களுக்கு இந்தக் குழு பயிற்சி முகாமை நடத்தியது.
உயிர் பிழைப்பதற்கான அடிப்படை நீச்சல் நுட்பங்கள், படகில் சென்றும் மீட்கும் நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து இவர்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டது.
சர்வதேச அங்கீகாரம் பெற்ற மீட்புக் குழுவினர் முன்னெடுக்கும் இந்தப் பயிற்சி முகாம் ஒரு வாரத்திற்குத் தொடரவுள்ளது.