by Staff Writer 22-11-2021 | 9:37 PM
Colombo (News 1st) யாழ். தென்மராட்சி பிரதேசத்தில் மாவீரர் நாள் நிகழ்வுக்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை சாவகச்சேரி நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
குற்றவியல் சட்டக் கோவையின் 120 ஆவது பிரிவுக்கு அமையவும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழும் தடை உத்தரவு கோரிய விண்ணப்பத்தை சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் பொலிஸார் கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.
இது தொடர்பான மனு, சாவகச்சேரி நீதவான் A. யூட்சன் முன்னிலையில் இன்று (22) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பையும் அதன் தலைவரையும் நினைவுகூர்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் எனவே அதனை தடை செய்யுமாறும் மன்றில் பொலிஸார் கோரிக்கை விடுத்தனர்.
அத்துடன் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 21 பேருக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்குமாறும் பொலிஸாரினால் கோரப்பட்டது.
இலங்கையிலுள்ள சட்ட திட்டத்தை யாராவது மீறினால் அவர்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுக்க முடியும் என தெரிவித்த சாவகச்சேரி நீதவான், ஊகத்தின் அடிப்படையில் தடை உத்தரவை வழங்க முடியாதென தெரிவித்து பொலிஸாரின் விண்ணப்பத்தை நிராகரித்தார்.