பூஜித் ஜயசுந்தர மீதான குற்றப்பத்திரிகை வாசிப்பு

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிரான குற்றப்பத்திரிகை வாசிப்பு

by Staff Writer 22-11-2021 | 1:55 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான வழக்கின் பிரதிவாதியான பூஜித் ஜயசுந்தரவிற்கு எதிரான 855 குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றபத்திரிகை விசேட மேல் நீதிமன்றத்தில் இன்று (22) வாசிக்கப்பட்டது. நாமல் பலல்லே, ஆதித்ய பட்டபெதிகே மற்றும் மொஹமட் இஸர்தீன் ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சந்தர்ப்பத்திலேயே குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டது. அடிப்படைவாதிகளால் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் புலனாய்வு துறையினரூடாக தகவல் கிடைத்தும், தாக்குதலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமையூடாக கடமையை மீறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து, சட்டமா அதிபரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. நீதிபதிகள் குழாமின் உத்தரவின் பிரகாரம் மேல் நீதிமன்றத்தின் மொழிபெயர்ப்பாளரினால் சுமார் ஒரு மணித்தியாலமாக குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டதுடன் அதில் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் தாம் நிரபராதி என பிரதிவாதியான பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார். இதனிடையே, தமது சேவை பெறுநர் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய காலத்தில் ஈஸ்டர் தாக்குதல்களை மேற்கொண்ட பயங்கரவாதிகளுக்கு வேண்டுமென்றே ஆதரவளிக்கவில்லை அல்லது கடமைகளை புறக்கணிக்கவில்லை என பூஜித் ஜயசுந்தரவின் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி ரொஷான் தெஹிவல, பகிரங்க நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார். எவ்வாறாயினும், முறைப்பாட்டில் முன்வைக்கப்பட்டுள்ள 33 குற்றச்சாட்டுகளையும் சாட்சி வழிநடத்தல் இன்றி ஏற்றுக்கொள்வதாக பாதிக்கப்பட்டோர் தரப்பு சட்டத்தரணி நீதிமன்றில் சுட்டிக்காட்டினார். 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சஹரான் ஹாஷீம் தலைமையிலான இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியோர் தேவாலயம் உள்ளிட்ட 07 இடங்களில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டமை, பலர் உயிரிழந்தமை மற்றும் மேலும் பலர் காயமடைந்தமை தொடர்பில் பாதிக்கப்பட்டோர் தரப்பு சட்டத்தரணி மன்றில் தெரிவித்தார். அது தொடர்பான பிரேத பரிசோதனை மற்றும் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையை சாட்சி விசாரணை இன்றி ஏற்றுக் கொள்வதற்கும் பாதிக்கப்பட்டோர் தரப்பு தயாரென அவர் கூறினார். இந்த வழக்கின் மேலதிக விசாரணைகளை நாளை (23) காலை 09 மணி வரை ஒத்திவைப்பதற்கு நீதிபதிகள் குழாம் தீர்மானித்துள்ளதுடன் அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானியும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான நிலந்த ஜயவர்தன, நாளைய தினம் மன்றில் சாட்சியமளிக்கவுள்ளார்.