எரிவாயு மற்றும் பால் மா இறக்குமதிக்கு பாதிப்பு

எரிவாயு மற்றும் பால் மா இறக்குமதிக்கு பாதிப்பு

by Staff Writer 20-11-2021 | 2:21 PM
Colombo (News 1st) நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடியின் மத்தியில், எரிவாயு மற்றும் பால் மா இறக்குமதிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நிலைமையை எதிர்கொள்ள மத்திய வங்கி தலையீடு செய்ய வேண்டும் என அமைச்சின் செயலாளர் K.D.S.ருவன்சந்திர தெரிவித்துள்ளார். அந்நிய செலாவணி கிடைக்காதமையினால் இந்த நெருக்கடிக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளதாகவும் அந்நிய செலாவணி வழமை போன்று கிடைக்கும் பட்சத்தில், தற்போது காணப்படுகின்ற நிலை வழமைக்கு திரும்புமென அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். இதனிடையே, டொலர் பற்றாக்குறையினால் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் S.R.ஆட்டிகல தெரிவித்தார். இதேவேளை, நாட்டிற்கு எரிவாயு கப்பலொன்று வந்துள்ள நிலையில், எரிவாயு விநியோகம் வழமைக்கு திரும்பும் என அவர் குறிப்பிட்டார். அத்துடன், நாட்டுக்கு தேவையான பால்மா கையிருப்பில் உள்ளதாக பால் மா வழங்குகின்ற பிரதான நிறுவனங்கள் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்தார். எனினும், பல பிரதேசங்களில் எரிவாயு , பால் மாவிற்காக மக்கள் வரிசையில் காத்திருப்பதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.