மூன்று வேளாண் சட்டங்களையும் மீள பெற்றார் மோடி

விவசாயிகளின் எதிர்ப்பால் 3 வேளாண் சட்டங்களையும் மீள பெற்றார் மோடி 

by Bella Dalima 19-11-2021 | 2:44 PM
Colombo (News 1st) இந்திய மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு இன்று (19) ஆற்றிய உரையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு முதல் விவசாயிகளுக்கு சேவை செய்வதையே நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் விவசாயிகளின் வேதனையை நேரடியாக தாம் அறிந்துள்ளதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார். நாட்டின் விவசாயிகளில் 80 சதவீதமானோர் சிறு விவசாயிகளாக உள்ள நிலையில், விவசாயிகளுக்காக தமது அரசினால் பல்வேறு நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மோடி தெரிவித்துள்ளார். அத்துடன், மத்திய அரசின் திட்டங்களால் வேளாண் பொருட்களின் உற்பத்தி பல மடங்கு உயர்வடைந்துள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, விவசாயிகளின் நலனுக்காகவே மூன்று வேளாண் சட்டங்களும் கொண்டுவரப்பட்டதாக கூறியுள்ளார். எனினும், விவசாயிகளில் ஒரு பகுதியினர் இந்த சட்டத்தை எதிர்த்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வேளாண் சட்டங்களின் நன்மைகளை விவசாயிகளிடம் தௌிவூட்டுவதற்காக பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும் அவை தோல்வியில் முடிந்தமையை பிரதமர் தனது உரையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையில், மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற தற்போது தீர்மானித்துள்ளதாக இன்றைய உரையில் பிரதமர் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன், விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார். எனவே, விவசாயிகள் தங்களின் போராட்டத்தைக் கைவிட்டு தத்தம் களப் பணிகளுக்கு திரும்புமாறு பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார். விவசாயிகளின் போராட்டம் ஓராண்டை நெருங்கவிருந்த நிலையில், பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. 1. அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து விலைகள் கட்டுப்பாட்டைத் தளர்த்தி சில பொருட்கள் அளவில் அதிகமாக விற்கப்படுவது அத்தியாவசியப் பொருளாகக் கொள்ளப்படும் 2. ஒப்பந்த வேளாண்மைக்கு அனுமதி மற்றும் வசதி செய்து கொடுத்தல் 3. ஏபிஎம்சி என்று அழைக்கப்படும் வேளாண் விளைபொருள் சந்தை கமிட்டிக்களின் எல்லைக்கு வெளியே தனியார் சந்தைகளை நிறுவுவது என்பன விவசாயிகள் எதிர்த்த மூன்று வேளாண் சட்டங்களாகும்.