அளவிற்கு அதிகமான அமைச்சர்கள் நியமனம்: அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து மனு தாக்கல்

by Staff Writer 19-11-2021 | 4:22 PM
Colombo (News 1st) இலங்கை அரசியல் அமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கையை விட அமைச்சரவை அமைச்சர்கள் 2 பேரும், 4 இராஜாங்க அமைச்சர்களும் அதிகமாக நியமிக்கப்பட்டுள்ளமையால், அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளதாக உத்தரவிடக் கோரி பொறியியலாளர் கபில ரேணுக பெரேரா உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளார். 20 ஆவது அரசியலமைப்பு திருதத்திற்கு அமைய, 30 அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சர்களை நியமிக்க முடியும் என வரையறை செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, செயற்படாத ஜனாதிபதி, அரசியலமைப்பினூடாக அமைய செயற்படத் தவறியுள்ளதாக உத்தரவிடக் கோரி சட்டத்தரணி தர்ஷன வேரதுவவினூடாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் அரசியலமைப்பை பாதுகாத்து அதனை வலுப்படுத்த வேண்டியதன் பொறுப்பு, ஜனாதிபதியின் பிரதான கடமை எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது சட்ட மா அதிபர், பிரதமர் தலைமையிலான அமைச்சரவை, இராஜாங்க அமைச்சர்கள், ஜனாதிபதி செயலாளர் பி.பீ ஜயசுந்தர, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல உள்ளிட்ட 82 பேர் மனுவின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர். தற்போதைய நிதி அமைச்சரால் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், அரசாங்கத்தின் வருடாந்த செலவு 525 பில்லியனை விட அதிகமாக காணப்படுவதாகவும் மனுதாரர் உயர் நீதிமன்றத்திற்கு எடுத்துக்கூறியுள்ளார். தற்போதைய நிதி அமைச்சராக பசில் ராஜபக்ஸ நியமிக்கப்பட்டுள்ளமையும், அபிவிருத்தித்துறைக்கு பொறுப்பான அமைச்சராக நாமல் ராஜபக்ஸ நியமிக்கப்பட்டுள்ளமையுமே இதற்கு பிரதான காரணம் என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனை தவிர சமல் ராஜபக்ஸ, நாமல் ராஜபக்ஸ, திலும் அமுனுகம மற்றும் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே ஆகியோர் இராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனூடாக 20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தை மீறும் வகையில் வழங்கப்பட்டுள்ள நியமனத்திற்கு அமைய, அமைச்சரவை அமைச்சு பதவிகளிலிருந்து இருவரும், இராஜாங்க அமைச்சுப் பதிவியிலிருந்து 4 பேரும் செயற்படுவதை வலுவிழக்கச் செய்யுமாறு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.