அசாத் சாலியின் விடுதலை: 2 ஆம் திகதி தீர்மானம்

அசாத் சாலியின் விடுதலை தொடர்பில் டிசம்பர் 2 ஆம் திகதி தீர்மானம்

by Staff Writer 19-11-2021 | 5:47 PM
Colombo (News 1st) மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மனுதாரர் தரப்பு சாட்சி விசாரணைகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (19) நிறைவு செய்யப்பட்டன. பிரதிவாதி தரப்பு சாட்சி விசாரணை இன்றி, பிரதிவாதியை விடுதலை செய்யுமாறு அசாத் சாலி சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன கோரிக்கை விடுத்துள்ளார். பிரதிவாதி தரப்பு சாட்சி விசாரணை இன்றி, பிரதிவாதியை விடுதலை செய்வதா, இல்லையா என்பது தொடர்பில் எதிர்வரும் 02 ஆம் திகதி உத்தரவிட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா தீர்மானித்துள்ளார். தாம் உள்ளிட்ட முஸ்லிம் மக்கள் அனைவரும் குர்ஆனில் கூறப்பட்டுள்ள சட்டங்களை மாத்திரமே ஏற்றுக்கொள்வதாகவும் நாட்டில் அமுல்படுத்தப்படும் சட்டங்கள் குறித்து பொருட்படுத்துவதில்லை எனவும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது கடந்த மார்ச் மாதம் 09 ஆம் திகதி அசாத் சாலி பகிரங்கமாக தெரிவித்ததற்கு அமைய, பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாய சட்டம் ஆகியவற்றின் கீழ் குற்றமிழைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.