எனக்கு நடந்த அநியாயம் யாருக்கும் நடக்கக்கூடாது: ரிஷாட் பதியுதீன்

by Bella Dalima 19-11-2021 | 5:00 PM
Colombo (News 1st) சிறையில் இருந்த காலங்களில் தான் அனுபவித்த துயரங்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் பகிர்ந்துகொண்டார். சிறையில் இருந்த 6 மாதங்களைப் பற்றி ஒரு பெரிய புத்தகத்தை எழுதிவிட முடியும் எனவும் தன் வாழ்நாளில் அவ்வாறானதொரு கஷ்டத்தை அனுபவித்ததில்லை எனவும் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டார். தனக்கு நடந்த அநியாயத்தை இந்த அரசாங்கமோ அல்லது வேறு அரசாங்கமோ எந்தவொரு சிறுபான்மை அரசியல் பிரதிநிதிக்கும் பிற்காலத்தில் செய்துவிடக் கூடாதென்று பிரார்த்திப்பதாக அவர் கூறினார்.
சாதாரண சிறைக் கைதியை விடவும் ஒரு படி மேலாக நடத்தினார்கள். இன்று சட்டத்தின் ஊடாக விடுதலை பெற்று பிணையிலே விடுவிக்கப்பட்டிருக்கிறேன்
என அவர் மேலும் குறிப்பிட்டார். அம்பாறை மாவட்டத்திற்கான விஜயத்தின் போதே ரிஷாட் பதியுதீன் இவ்விடயங்களை பகிர்ந்துகொண்டார். அம்பாறை - நற்பிட்டிமுனை, நாவிதன்வௌி, அக்கரைப்பற்று பகுதிகளுக்கு பாராளுன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இன்று (19) சென்றிருந்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் முதுநபினும் இதன்போது பிரசன்னமாகியிருந்தார்.