by Staff Writer 18-11-2021 | 10:25 PM
Colombo (News 1st) அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட குழுவினர் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் சந்திப்புகளில் கலந்துகொண்டுள்ளனர்.
அமெரிக்க வெளிவிவகார செயலகத்தின் அழைப்பின் பேரில் வாஷிங்டன் பேச்சுவார்த்தையில் இந்த குழுவினர் பங்கேற்றுள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பிரிவு மற்றும் உலகத் தமிழர் பேரவையுடனான இந்த சந்திப்பு ஆக்கபூர்வமானதாக அமைந்திருந்ததுடன், அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான பிரிவின் ட்விட்டர் வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
முழுமையான நிலைமாற்று நீதிக்கான நிகழ்ச்சி நிரலுக்கான பங்களிப்பு தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக உலகளாவிய குற்றவியல் நீதிக்கான பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் உள்ள சிறுபான்மை மக்களின் நல்லிணக்கத்தை மேம்படுத்துவது மற்றும் எதிர்கால முன்நகர்வுகள் தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளதாக உலகளாவிய குற்றவியல் நீதிக்கான பிரிவின் ட்விட்டர் வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான பிரிவினரோடும் ஜனநாயகம் , மனித உரிமைகளுக்கான பிரிவினரோடும் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் ஜனநாயகம் , மனித உரிமைகள் மற்றும் தொழிலாளருக்கான பணியகத்தை மேற்கோள்காட்டி எம்.ஏ.சுமந்திரன் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.
இலங்கையில் உள்ள சிறுபான்மையினரின் பாதுகாப்பு மற்றும் சிறுபான்மையினரின் அரசியல் பிரதிநிதித்துவம் தொடர்பிலான அமெரிக்காவின் முன்னுரிமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் ஜனநாயகம் , மனித உரிமைகள் மற்றும் தொழிலாளருக்கான பணியகத்தின் உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
இலங்கையின் தற்போதைய மனித உரிமைகள் தொடர்பிலான பிரச்சினைகள் மற்றும் புலம்பெயர் தமிழர்களுடனான உறவுகளை உறுதிப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக குறித்த ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.