ஆங் சான் சூ கி மீது தேர்தல் மோசடி குற்றச்சாட்டு

ஆங் சான் சூ கி மீது தேர்தல் மோசடி குற்றச்சாட்டு

by Staff Writer 17-11-2021 | 8:35 AM
Colombo (News 1st) மியன்மாரில் பதவியிலிருந்து அகற்றப்பட்ட சிவில் நிர்வாகத் தலைவர் ஆங் சான் சூ கி மீது மேலும் பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. தேர்தல் மோசடிகள் மற்றும் சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்டதாக இராணுவ அரசாங்கத்தினால் அவர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட 16 பேரில், பதவியிலிருந்து அகற்றப்பட்ட ஜனாதிபதி மற்றும் தலைநகரின் மேயர் ஆகியோரும் அடங்குகின்றனர். இவ்வாண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி இராணுவக் கிளர்ச்சியின் மூலம் பதவியிலிருந்து அகற்றப்பட்டதன் பின்னர், 76 வயதான ஆங் சான் சூ கி பொதுவௌியில் பிரசன்னமாகவில்லை. வீட்டுக்காவலில் உள்ள போதிலும், தமது உறவினர் நண்பர்களுடனேயே அவர் வசித்து வருவதாகவும் அவருக்கு வேண்டியவற்றை நிறைவேற்றி சிறப்பாக கவனித்து வருவதாகவும் மியன்மார் இராணுவப் பேச்சாளர் நேற்று (16) தெரிவித்திருந்தார். இருப்பினும், அவரது வழக்கு விடயம் தொடர்பாக பொதுவௌியில் பேசுவதற்கு, இராணுவ ஆட்சியாளர்களால் தமக்கு தடையேற்படுத்தப்படுவதாக ஆங் சான் சூ கியின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். அவரை பார்வையிட வேண்டுமென கோரும் ஐ.நா அதிகாரிகள் மியன்மாருக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.