பனாமுரே பொலிஸ் நிலையத்திற்குள் சந்தேகநபர் தூக்கிட்டு தற்கொலை: சார்ஜன்டும் கான்ஸ்டபிளும் பணி நீக்கம்

பனாமுரே பொலிஸ் நிலையத்திற்குள் சந்தேகநபர் தூக்கிட்டு தற்கொலை: சார்ஜன்டும் கான்ஸ்டபிளும் பணி நீக்கம்

எழுத்தாளர் Staff Writer

17 Nov, 2021 | 4:26 pm

Colombo (News 1st) சந்தேகநபர் தூக்கிட்டு உயிரிழந்தமை தொடர்பில் எம்பிலிப்பிட்டிய – பனாமுரே பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய சார்ஜன்ட் ஒருவரும் கான்ஸ்டபிள் ஒருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

14 வயது சிறுமி மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் சந்தேகநபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சிறைக்கூடத்திற்குள் இன்று அதிகாலை தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்ட சந்தேகநபர், எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

வெல்லபொத்தயாய பகுதியை சேர்ந்த 38 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

மதுபோதையில் வீட்டிற்கு செல்லும் சந்தேகநபர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை அடித்து துன்புறுத்துகின்றமை தொடர்பில் இதற்கு முன்னர் 07 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

உயிரிழந்த சந்தேகநபர் மதுபான பாவனைக்கு அடிமையானவர் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேகநபர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லை என இதுவரையான விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், சிறைக்கூடத்திற்குள் சந்தேகநபர் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, கடமைநேர அதிகாரிகள் உரியவாறு தனது கடமையை முன்னெடுக்கவில்லையா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் சப்ரகமுவ மாகாணத்திற்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகரின் நேரடி கண்காணிப்பின் கீழ் எம்பிலிப்பிட்டிய பிராந்திய குற்ற விசாரணை பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முன்னதாக, சந்தேகநபரின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக உயிரிழந்தவரின் உறவினர்களும் கிராம மக்களும் பனாமுரே பொலிஸ் நிலையத்திற்கு அருகே கூடி எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

இன்று காலை 8 மணியளவில் எம்பிலிப்பிட்டிய- சூரியகந்த வீதியூடான போக்குவரத்தும் தடைப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்