அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் மாபெரும் பேரணி

அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் மாபெரும் பேரணி

எழுத்தாளர் Staff Writer

16 Nov, 2021 | 6:50 pm

Colombo (News 1st) ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம் திட்டமிட்டவாறு கொழும்பில் இன்று (16) நடைபெற்றது.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டப் பேரணி ஆரம்பமானது.

சமையல் எரிவாயு, பால் மா, அரிசி, மரக்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உர தட்டுப்பாட்டால் விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கோரியும் அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கொள்ளுப்பிட்டிசந்தி வரை பேரணியாக வந்தவர்கள் காலி முகத்திடல் நோக்கி பயணித்தனர்.

பின்னர் காலிமுகத்திடல் சுற்றுவட்டத்தில் ஒன்றுகூடினர்.

இதனிடையே வாகனங்களில் கொழும்பிற்கு வருகை தருவோரை மட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

கொழும்பு – களுத்துறை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள பாணந்துறை வீதித்தடையில் கொழும்பு நோக்கி பயணித்த அனைத்து பஸ்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

ஹைலெவல் வீதியில் பயணித்த பஸ்கள் நுகேகொடை மேம்பாலத்திற்கு அருகில் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

அரலகங்கில பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி வந்த ஐக்கிய மக்கள் சக்தியின் அணியினர் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதேவேளை, பொலன்னறுவை, மணம்பிட்டி, கத்துறுவெல ஆகிய பிரதேசங்களிலும் மக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

நாட்டில் பல பிரதேசங்களில் வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டு கொழும்பிற்கு வரும் வாகனங்கள் பொலிஸாரால் பரிசோதிக்கப்பட்டன.

எதிர்க்கட்சியின் எதிர்ப்பு பேரணியினை முன்னெடுப்பதற்கு பல இடங்களில் பொலிஸாரால் இடையூறு ஏற்பட்டது.

குருநாகல் – ஹிரிபிட்டிய, குருநாகல் – மாவத்தகம, வாரியபொல, பலாங்கொடை, ஹல்துமுல்ல மற்றும் நொச்சியாகம உள்ளிட்ட பகுதிகளில் இடையூறு ஏற்பட்டது.

கொழும்பிற்கு வருகை தர முடியாமற்போனோர், பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

பெந்தோட்டை பகுதியிலும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் அநுராதபுரத்தில் இருந்து வருகை தந்த ஐக்கிய மக்கள் சக்தி குழுவினருக்கு அநுராதபுர எல்லையயை கடப்பதற்கு ராஜாங்கனை பொலிஸாரால் அனுமதி வழங்கப்படவில்லை.

ஊவா, சப்ரகமுவ மாகாண நுழைவாயிலில் ஹல்தமுல்ல, மரங்கஹவெல பிரதேசத்திலும் கொழும்பிற்கு வருகை தந்த வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்