by Staff Writer 15-11-2021 | 6:10 PM
Colombo (News 1st) ஏழு மாதங்களாக தடுத்துவைக்கும் உத்தரவின் பேரில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பிலிருந்த ரியாஜ் பதியுதீனை கடும் நிபந்தனைகளுடன் தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்க உயர் நீதிமன்றத்தால் இன்று (15) உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபை எல்லையைத் தாண்டி செல்ல தடை விதித்தும் ஒவ்வொரு மாதமும் முதலாம் மற்றும் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமைகளில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சமூகமளிக்க வேண்டுமெனவும் நிபந்தனைகளுடன் உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், கொழும்பு மாநகர சபையின் எல்லைக்கு வௌியே செல்வதாக இருந்தால் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளரிடம் அனுமதி பெற வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.
வௌிநாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்வதாக இருந்தால், அதற்கான அனுமதியை நீதிமன்றத்தினூடாக பெற வேண்டுமென விஜித் மலல்கொட, முர்து பெர்னாண்டோ மற்றும் காமினி அமரசேகர ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.
ரியாஜ் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை, அடுத்த வருடம் மே மாதம் 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுமென நீதிபதிகள் குழாம் உத்தரவு பிறப்பித்துள்ளது.