கிளிநொச்சி கோர விபத்தில் பாடசாலை மாணவி உயிரிழப்பு

by Staff Writer 15-11-2021 | 1:34 PM
Colombo (News 1st) கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாகவுள்ள பாதசாரி கடவையில் இன்று (15) காலை இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொரு மாணவி காயமடைந்துள்ளார். வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்று குறித்த பாதசாரி கடவைக்கு அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரு லொறிகள் மீது மோதியுள்ளது. இதன்போது பாதசாரி கடவையை கடந்துசென்ற மாணவிகள் மீது லொறிகள் மோதி விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று காலை 8.15 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் 17 வயதான மாணவி ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றுமொரு மாணவி காயமடைந்துள்ளார். உயிரிழந்த மாணவியின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்த மாணவி குறித்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி மற்றும் லொறி சாரதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.