ஹட்டன் - பொகவந்தலாவை பிரதான வீதி நிர்மாண பணிகளை துரிதப்படுத்த கோரி மறியல் போராட்டம்

by Staff Writer 14-11-2021 | 9:30 PM
Colombo (News 1st) காபட் இட்டு புனரமைக்கப்பட்டு வரும் ஹட்டன் - பொகவந்தலாவை பிரதான வீதியின் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்துமாறு கோரி இன்று (14) மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. ஹட்டனிலிருந்து பொகவந்தலாவைக்கு போக்குவரத்தில் ஈடுபடும், பஸ்களின் சாரதிகளும் நடத்துனர்களும் இணைந்து டின்சின் நகரில் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹட்டன் - பொகவந்தலாவை பிரதான வீதியின் நோர்வூட்டிலிருந்து பொகவந்தலாவை கெம்பியன் நகர் வரையான வீதியின் புனரமைப்புப் பணிகளைத் துரிதப்படுத்துமாறு இவர்கள் வலியுறுத்தினர். 15.5 கிலோமீட்டர் நீளமான இந்த வீதியின் புனரமைப்புப் பணிகள் தனியார் நிறுவனமொன்றினால் முன்னெடுக்கப்படுவதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் கூறினார். இந்த வீதியின் புனரமைப்புப் பணிகள் கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டன. பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக நோயாளர்களை வேறு வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்வதற்கும் இந்த வீதி பயன்படுத்தப்படுவதால் உயிர் அச்சுறுத்தல் ஏற்படுவதாக மக்கள் கூறுகின்றனர். வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நோர்வூட் பகுதிக்கான நிறைவேற்றுப் பொறியியலாளர் கே.டி. ரங்க தேவப்பிரியவிடம் வினவியபோது, கடந்த சில மாதங்களாக பொகவந்தலாவை பகுதியில் கடும் மழையுடனான வானிலை நிலவுவதால் வீதி அபிவிருத்திப் பணிகள் முடங்கியுள்ளதாக கூறினார். இம் மாத இறுதிக்குள் நோர்வூட்டிலிருந்து பொகவந்தலாவை வரையான 07 கிலோமீட்டர் வீதி முழுமையாகக் காபட் இட்டு புனரமைத்துத் தருவதாக ஒப்பந்த நிறுவனம் வாக்குறுதியளித்துள்ளதாகவும் இது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பொறியியலாளர் மேலும் குறிப்பிட்டார்.