ராஜராஜ சோழனின் சதய விழா; விழாக்கோலம் பூண்டது தஞ்சை

மாமன்னர் ராஜராஜ சோழனின் 1036 ஆவது சதய விழா; விழாக்கோலம் பூண்டது தஞ்சை

by Bella Dalima 13-11-2021 | 2:35 PM
Colombo (News 1st) மாமன்னர் ராஜராஜ சோழனின் 1036 ஆவது சதய விழா இன்று அரச விழாவாக தஞ்சையில் கொண்டாடப்பட்டு வருகிறது. சோழ சாம்ராஜ்யத்தின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவர் ராஜராஜ சோழன். இவரது முப்பதாண்டு ஆட்சிக்காலம் சோழப் பேரரசின் வரலாற்றில் மட்டுமல்லாது தென் தமிழக வரலாற்றிலும் மிக முக்கியமானதாக விளங்குகிறது. உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் இவரது ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. இவர் பேரரசர் சுந்தர சோழனுக்கும் சேர நாட்டு வானவன் மாதேவிக்கும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று பிறந்தார். இவரது பிறந்த நாள் சதய விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மாமன்னர் ராஜராஜ சோழனின் 1036 ஆவது சதய விழா இன்று அரச விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து, இன்று தஞ்சை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. 2 நாட்கள் கொண்டாடப்படும் இந்த விழாவானது கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாக ஒரு நாள் மாத்திரமே கொண்டாடப்பட்டு வருகிறது. சதய விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் இன்று பாடசாலை, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோவிலில் இன்று காலை மங்கள இசையுடன் சதய விழா தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான திருமஞ்சன வீதி உலா, கோவில் வளாகத்திற்கு உள்ளேயே நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஓதுவார்கள் வேத மந்திரங்களை முழங்க, மங்கள வாத்தியங்களுடன் பெரிய கோவிலில் இருந்து எடுத்துவரப்பட்ட மாலையை மாமன்னர் ராஜராஜ சோழனின் சிலைக்கு அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து தஞ்சை பெருவுடையாருக்கு 46 திவ்ய அபிஷேகமும் நடைபெறவுள்ளது.