Colombo (News 1st) மது வரி அதிகரிக்கப்பட்டுள்ளமையால் மதுபான வகைகளுக்கு இன்று (13) முதல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒரு லிட்டர் உள்நாட்டு விசேட சாராயத்திற்கு விதிக்கப்பட்டிருந்த 3800 ரூபா வரி 380 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, புதிய வரியாக 4180 ரூபா அறிவிக்கப்பட்டுள்ளதாக கலால் வரி திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர், மதுவரி ஆணையாளர் கபில குமாரசிங்க குறிப்பிட்டார்.
மொலாசஸ், பனை, தெங்கு ஆகியவற்றை பதனிட்டு தயாரிக்கப்படும் மதுபானங்களுக்கான 4050 ரூபா வரி 410 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இந்த வகை மதுபானங்களுக்கான புதிய வரி 4460 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தயாரிக்கப்படும் விஸ்கி, பிராண்டி, ரம் ஆகிய வௌிநாட்டு மதுபானங்களுக்கு அறவிடப்பட்ட 4150 ரூபா வரிக்கு மேலும் 420 ரூபா அதிகரிக்கப்பட்டு 4570 ரூபாவாக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அதிகளவு கொள்வனவு செய்யப்படும் பியருக்காக இதுவரை 3200 ரூபா வரி அறிவிடப்பட்டதுடன், புதிய வரி திருத்தத்திற்கு அமைய 250 ரூபா அதிகரிக்கப்பட்டு 3450 ரூபா வரி அறிவிடப்படவுள்ளது.
ஒரு லிட்டர் மதுபானத்திற்கு விதிக்கப்பட்டுள்ள வரிக்கு அமைய, மதுபான வகைகளின் சில்லரை மற்றும் மொத்த விலைகளை மதுபான உற்பத்தியாளர்கள் தீர்மானித்ததன் பின்னர் அது குறித்து அறிவிக்கப்படும் என கலால் வரி திணைக்களத்தின் ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்தார்.
