யுகதனவி: நீதியரசர்கள் குழாமொன்றை நியமிக்க கோரிக்கை

யுகதனவி தொடர்பான மனுக்களை பரிசீலிக்க நீதியரசர்கள் குழாமை நியமிக்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை

by Bella Dalima 12-11-2021 | 4:03 PM
Colombo (News 1st) யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பரிசீலிக்க முழுமையான நீதியரசர்கள் குழாமை நியமிக்குமாறு சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயங்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவை எனவும், முழுமையான நீதியரசர்களை நியமிப்பதே பொருத்தமானது எனவும் சுட்டிக்காட்டி, பிரதமர் தலைமையிலான அமைச்சரவை சார்பில் மன்றில் ஆஜரான சிரேஷ்ட மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் பர்ஸானா ஜமீர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, எல்லே குணவன்ச தேரர், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க மற்றும் இலங்கை மின்சார தொழில்நுட்ப சங்கத்தின் பொதுச்செயலாளர் ரஞ்சன் ஜயலால் பெரேரா ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட 03 மனுக்கள், புவனேக அலுவிஹாரே, H.M.D. நவாஸ் மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாமினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.