பலத்த மழையால் 2,30,185 பேர் பாதிப்பு

பலத்த மழையால் 2,30,185 பேர் பாதிப்பு; புதிய தாழமுக்க நிலை உருவாகக்கூடும்

by Bella Dalima 12-11-2021 | 1:50 PM
Colombo (News 1st) பலத்த மழையினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,30,185 ஆக அதிகரித்துள்ளதென இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட 12,700-க்கும் அதிகமானோர் 80 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மழையுடனான வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளதுடன் ஒருவர் காணாமற்போயுள்ளார். இதேவேளை, மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் 75 மில்லிமீட்டர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் காலை நேரத்தில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இரவு வேளையில் மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் இடைக்கிடையே 40 தொடக்கம் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். இதேவேளை, தெற்கு அந்தமான் தீவு பகுதியில் புதிய தாழமுக்க நிலை நாளை உருவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதனால் கடல்சார் தொழிலாளர்கள் மிகவும் விழிப்புடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடற்பிராந்தியங்களில் 2.5 தொடக்கம் 3 மீட்டர் வரை அலை மட்டம் உயரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.