பலத்த மழையால்  2,22,590 பேர் பாதிப்பு

பலத்த மழை: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,22,590 ஆக அதிகரிப்பு

by Bella Dalima 11-11-2021 | 1:43 PM
Colombo (News 1st) பலத்த மழையுடன் கூடிய வானிலையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,22,590 ஆக அதிகரித்துள்ளது. 11,700 பேருக்கும் மேற்பட்டோர் 80 இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி 25 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமற்போயுள்ளார். நிலவும் மழையுடனான வானிலை காரணமாக இதுவரை 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே, இன்று முதல் மழையுடனான வானிலையில் மாற்றம் ஏற்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. எனினும் மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி , மாத்தறை மாவட்டங்களிலும் இன்று இடைக்கிடையே மழை பெய்யலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வட மத்திய, ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் மாலை வேளையில் மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் கூறியுள்ளது. மழைவீழ்ச்சி குறைவடைந்துள்ளதால், ஆறுகளில் அதிகரித்திருந்த நீர் மட்டம் குறைவடைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், மஹா ஓயாவை அண்டிய பகுதிகளில் வௌ்ள அபாயம் தொடர்ந்தும் நீடிப்பதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் எஸ். பீ.சீ. சுகீஷ்வர கூறினார். இதேவேளை, பல பகுதிகளிலுமுள்ள நீர்த்தேக்கங்களும் வாவிகளும் தொடர்ந்தும் வான் பாய்வதாக நீர்ப்பாசன திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பலத்த மழையினால் 11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது. மண்சரிவு அபாயத்தினால் மூடப்பட்ட கொழும்பு - கண்டி பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ நாளை (12) காலை 9 மணி வரை மூடப்பட்டிருக்கும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதனால் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு சாரதிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மண்சரிவு அபாயம் காரணமாக, கண்டி -கொழும்பு பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதி நேற்றிரவு 10 மணி முதல் மூடப்பட்டுள்ளது. இதனிடையே, கம்பளை - நுவரெலியா பிரதான வீதியின் அட்டபாகே பகுதியில் இரண்டு மாடி கட்டிடமொன்று இடிந்து வீழ்ந்துள்ளது. அட்டபாகே ஆற்றுக்கருகில் அமைந்திருந்த குறித்த வர்த்தக நிலையம், முழுமையாக ஆற்றில் இடிந்து வீழ்ந்துள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். கம்பளை - நுவரெலியா பிரதான வீதியின் அட்டபாகே பகுதி தாழிறங்கிய நிலையில், தற்போது ஒருவழி போக்குவரத்து முன்னெடுக்கப்படுகின்றது. சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை. கண்டி - கலஹா, நில்லம்பை பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. கொத்மலை - பூண்டுலோயா டன்சீன் மத்திய பிரிவிலுள்ள குடியிருப்புகளில் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதோடு, ஒரு வீட்டின் சமையலறை பின்புறமாக பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.