ஓய்வூதிய வயதெல்லை 60 ஆக அதிகரிப்பு

by Bella Dalima 11-11-2021 | 5:44 PM
Colombo (News 1st) ஓய்வூதியத்திற்கான குறைந்தபட்ச வயதெல்லை தொடர்பான சட்டமூலம் திருத்தங்களுடன் இன்று (11) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கமைய, குறைந்தபட்ச ஓய்வூதிய வயதெல்லை 60 என திருத்தப்பட்டுள்ளது. தற்போது அமுலில் உள்ள 55 வயது என்ற ஓய்வூதிய வயதெல்லை 60 வயது வரை நீடிக்கப்பட்டாலும், ஊழியர் ஒருவர் தனது சுய விருப்பின் அடிப்படையில் 55 வயதில் ஊழியர் சேமலாப நிதியை பெற்றுக்கொள்ள முடியும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பாராளுமன்றத்தில் இன்று அறிவித்தார். புதிய சட்டமூலத்திற்கு அமைய, 55 வயதான ஊழியர்கள் 57 வயது வரை பணியாற்ற முடியும். 53 தொடக்கம் 54 வயதிற்கிடைப்பட்டவர்கள் 58 வயது வரையும் 52 வயதுடையவர்கள் 59 வயது வரையும் 52 வயதிற்கு குறைந்தவர்கள் மற்றும் புதிதாக இணைத்துக்கொள்ளப்படும் ஊழியர்கள் 60 வயது வரையும் பணியாற்ற முடியும். 50 வயது பூர்த்தியடைந்த பெண்களும் 55 வயது பூர்த்தியடைந்த ஆண்களும் தாம் விரும்பிய வயதில் ஓய்வு பெற முடியும் என சட்டமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.