சீன கப்பல் மீண்டும் பயணிக்க நிபந்தனைகள் முன்வைப்பு

by Bella Dalima 11-11-2021 | 8:24 PM
Colombo (News 1st) சீனாவின் உரம் ஏற்றிய கப்பல் தற்போது இலங்கையின் நீதிமன்ற அதிகாரத்திற்கு உட்பட்ட 12 கடல் மைல் தொலைவில் களுத்துறை கடற்பரப்பிற்கு அருகில் இலங்கை கடலில் நங்கூரமிட்டுள்ளது. கப்பல் திரும்பி செல்ல வேண்டுமாக இருந்தால், Qingdao Seawin Biotech Company அரசாங்கத்திற்கு சில நிபந்தனைகள் முன்வைத்துள்ளதாக குறித்த உரத்தின் இறக்குமதியாளரான அரச உர நிறுவனம் தெரிவித்தது. தாவரவியல் தனிமைப்படுத்தல் சேவையின் அனுமதி இன்றி வருகை தந்தமை மாத்திரமே கப்பல் மீண்டும் திரும்பி செல்வதற்கு காரணம் என ஊடகங்களுக்கு கருத்து வௌியிடுவது அதன் பிரதான விடயமாகும். கப்பல் மீண்டும் வருவதற்கு தேவைப்படும் நாட்களுக்கான நட்டத்தை செலுத்த வேண்டும் எனவும் சீனாவின் நிறுவனம் முன்வைத்துள்ள நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், கப்பலுக்கு எவ்வித கொடுப்பனவும் செலுத்தப்படாது என விவசாய அமைச்சு தெரிவித்தது. அறிவிக்கப்படாத பொருளுக்கான கட்டணத்தை செலுத்துவதற்கு சட்டத்தின் பிரகாரம் அவசியம் இல்லை எனவும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித் கே. ஜயசிங்க தெரிவித்தார்.