உலக விஞ்ஞான தினத்தையொட்டிய நிகழ்வு

அரசிடம் எதிர்பார்க்கும் விடயங்கள் நிறைவேற்றப்படாவிட்டால் பழைய குழுக்களை ஆட்சிக்கு கொண்டுவரும் முறைமை மாற்றப்பட வேண்டும் - ஜனாதிபதி

by Staff Writer 10-11-2021 | 10:20 PM
Colombo (News 1st) தமது அரசாங்கத்திடம் மக்கள் எதிர்பார்க்கும் விடயங்கள் நிறைவேற்றப்படாவிட்டால் பழைய குழுக்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவரும் முறைமை மாற்றப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். உலக விஞ்ஞான தினத்தை முன்னிட்டு அலரி மாளிகையில் நடைபெற்ற வைபவத்தின் போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். உலக விஞ்ஞான தினத்தையொட்டி, இலங்கையின் தேசிய விஞ்ஞான தினம் மற்றும் விஞ்ஞான வார நிகழ்வு இன்று (10) நடைபெற்றது. புதிய கண்டுபிடிப்பாளர்கள் குழுவினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர். கல்வி அமைச்சு மற்றும் திறன் விருத்தி அமைச்சு என்பன இணைந்து நாடளாவிய ரீதியில் 1,500 பாடசாலைகளில் புத்துயிராக்க ஆய்வுகூடங்களை அமைக்கும் திட்டத்தின் கீழ் மாகாண மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட ஒன்பது பாடசாலைகளுக்கு இதன்போது காசோலை வழங்கப்பட்டது.