அனர்த்தங்களில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு

Extreme Weather: அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக உயர்வு

by Staff Writer 09-11-2021 | 9:49 PM
Colombo (News 1st) நாட்டின் பல பிரதேசங்களில் பெய்துவரும் கடும் மழையுடனான வானிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக உயர்வடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. ஐவர் காயமடைந்துள்ளனர். 17 மாவட்டங்களில் 23,638 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேநேரம், 960 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. மழையுடனான வானிலையினால் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியிலுள்ள தாழ்நிலங்கள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன. இன்று (09) காலை 5.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் யாழ்ப்பாணத்தில் 200 மில்லிமீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியிருந்தது. இதனையடுத்து, யாழ். மாவட்டத்திலுள்ள சகல பாடசாலைகளுக்கும் இன்றைய தினம் விசேட விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. அச்சுவலி வல்லைப்பகுதியில் கடல்நீரேரியின் நீர் வீடுகளுக்குள் நிறைந்துள்ளதால் 20 இற்கும் மேற்ப்பட்ட குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, சங்கானை பிரதேச செலயத்திற்குட்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட வௌ்ள நிலைமையினால் பாதிக்கப்பட்ட சுமார் 40 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். மருதங்கேணி, உடுவில், சங்கானை, நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் வௌ்ள நிலைமையினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட செம்பியன்பற்று கிராமம், செம்பியன்பற்று தெற்கு ஜே/427 கிராமசேவகர் பிரிவிலுள்ள பல வீடுகளிலும் வௌ்ளம் நிறைந்துள்ளது. மழையுடனான வானிலையால் கோப்பாய் பிரதேச செயலத்திற்குட்பட்ட அக்கரை கிராம பகுதியிலுள்ள வீடுகளும் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன. யாழ். தெல்லிப்பபழை பிரதேச செயலத்திற்குட்பட்ட மல்லாகம் நீதவான் நலன்புரி முகாமில் வசிக்கும் 39 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வௌ்ள நிலைமையினை அடுத்து இடம்பெயர்ந்து தேவாலயத்தில் தங்கியுள்ளனர். கடும் மழையினை அடுத்து முல்லைத்தீவின் நந்திக்கடலின் நீர்மட்டம் அதிகரித்தமையால் வட்டுவாகல் தொடுவாய் உடைப்பெடுத்ததை அடுத்து நீர்ப்பிரவாகம் வடிந்தோடி வருகின்றது. அத்துடன் நந்திக்கடலை அண்மித்துள்ள பகுதிகளிலுள்ள விவசாய நிலங்கள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன. மன்னார் மாவட்டத்தின் 05 பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஏற்பட்ட வௌ்ள நிலைமையினால் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இடம்பெயர்ந்து உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். சாந்திபுரம், சவுத்பார், தாழ்வுப்பாடு, தலைமன்னார், ஊர்மனை கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் 3 அடிவரை வெள்ளம் நிறைந்துள்ளது. தொடரச்சியான மழையினால் மன்னார் மாவட்டத்தின் பிரதான நீராதாரமான கட்டுக்கரைக்குளத்தில் வான்பாய ஆரம்பித்துள்ளது. இதனால் தாழ்நிலப் பகுதிகளிலுள்ள விளைநிலங்களில் நீர்ப்பிரவாகம் வியாபித்து வருகின்றது.