அருட்தந்தை சிறில் காமினி கைது செய்யப்படமாட்டார் – குற்றப்புலனாய்வு திணைக்களம்

அருட்தந்தை சிறில் காமினி கைது செய்யப்படமாட்டார் – குற்றப்புலனாய்வு திணைக்களம்

எழுத்தாளர் Staff Writer

08 Nov, 2021 | 10:59 am

Colombo (News 1st) அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் சுரேஷ் சாலேவினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய அருட்தந்தை சிறில் காமினி கைது செய்யப்படமாட்டார் என குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர், சட்டமா அதிபருக்கு தெரிவித்துள்ளதாக சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ரோஹந்த அபேசூரிய உயர் நீதிமன்றத்திற்கு இன்று (08) அறிவித்துள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தம்மை கைது செய்வதற்கு எடுக்கும் முயற்சியை தடுத்து இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி அருட்தந்தை சிறில் காமினியினால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜித் மலல்கொட, L.T.B. தெஹிதெனிய மற்றும் P. பத்மன்சூரிய ஆகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த அடிப்படை உரிமை மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

குறித்த முறைப்பாடு தொடர்பான வழக்கு விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் அறிவிக்கும் பட்சத்தில் தேவையான வாக்குமூலத்தை வழங்க தமது சேவை வழங்குநரான அருட்தந்தை சிறில் காமினி இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் சார்பில் ஆஜராகிய சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

அதற்கமைய, மனு மீதான பரிசீலனையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 04 ஆம் திகதி மீண்டும் நடத்துவதற்கு உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு மக்களை தௌிவுபடுத்துவதற்காக கடந்த 23 ஆம் திகதி Zoom தொழில்நுட்பத்தினூடாக நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போது, தாம் தொடர்பில் பொய்யான தகவல்கள் தெரிவிக்கப்பட்டதாகவும் அது குறித்த விசாரணை மேற்கொள்ளுமாறும் கடந்த 25 ஆம் திகதி சுரேஷ் சாலேவினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்