மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது இலங்கை

T20 உலகக்கிண்ணம்: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் இலங்கை வெற்றி

by Bella Dalima 05-11-2021 | 6:19 AM
Colombo (News 1st) உலகக்கிண்ண T20 கிரிக்கெட் தொடரில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. அடுத்த சுற்றான அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இலங்கை ஏற்கனவே இழந்துவிட்ட நிலையில், இலங்கை எதிர்கொண்ட கடைசி லீக் போட்டியாக இது அமைந்திருந்தது. அபுதாபியில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு குசல் ஜனித் பெரேரா மற்றும் பெத்தும் நிஸங்க ஜோடி நிதானமான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தது. குசல் ஜனித் பெரேரா 29 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பெத்தும் நிஸங்கவுடன் அடுத்து இணைந்த சரித் அசலங்க சிறப்பாக துடுப்பெடுத்தாடி அணியின் ஓட்ட எண்ணிக்கை உயர வழிவகுத்தார். இவர்கள் 61 பந்துகளில் 91 ஓட்டங்களைப் பகிர்ந்ததுடன் அரைச்சதங்களையும் கடந்தனர். பெத்தும் நிஸ்ஸங்க 41 பந்துகளில் 5 பௌண்டரிகளுடன் 51 ஓட்டங்களையும், சரித் அசலங்க ஒரு சிக்ஸர், 8 பௌண்டரிகளுடன் 68 ஓட்டங்களையும் பெற்றனர். அணித்தலைவர் தசுன் ஷானக்க 25 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள இலங்கை அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 189 ஓட்டங்களைக் குவித்தது. Andre Russell 2 விக்கெட்களையும் Dwayne Bravo ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். பதிலளித்தாடிய மேற்கிந்தியத்தீவுகளின் முதல் இரண்டு விக்கெட்களும் 10 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன. அதன் பின்னர் களமிறங்கிய Roston Chase 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இருப்பினும், அதிரடியாக துடுப்பெடுத்தாடிய Nicholas Pooran 1 சிக்ஸர்கள் 6 பவுண்ட்ரிகளுடன்46 ஓட்டங்களைப் பெற்று அணியை வலுப்படுத்தினார். Shimron Hetmyer ஆட்டமிழக்காமல் 81 ஓட்டங்களை குவித்தார். எனினும், மேற்கிந்திய தீவுகள் அணியினால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ஓட்டங்களையே பெற முடிந்தது. பந்துவீச்சில் பினுர பெர்னாண்டோ, சாமிக்க கருணாரத்ன, வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.