by Bella Dalima 05-11-2021 | 7:51 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - கோவலம் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கடந்த மாதம் 18 ஆம் திகதி விபத்திற்குள்ளான படகில் இருந்து காப்பாற்றப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு தமிழக மீனவர்களும் கடந்த மாதம் 26 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டனர்.
விடுதலை செய்யப்பட்ட இரண்டு இந்திய மீனவர்களும் நேற்றிரவு விமானத்தின் மூலம் தமிழகத்திற்கு அனுப்பப்பட்டனர்.
இதன்போது, காணாமற்போன இந்திய மீனவரின் சடலமும் கடந்த மாதம் 20 ஆம் திகதி மீட்கப்பட்டு தமிழகத்திலுள்ள உறவினர்களிடம் அண்மையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
இதனிடையே கடந்த மாதம் 13 ஆம் திகதி பருத்தித்துறை - பலாலி கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த தமிழகத்தின் நாகபட்டினத்தை சேர்ந்த 23 மீனவர்களை இந்த மாதம் 11 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் மேற்கொள்கின்ற அத்துமீறிய செயற்பாடுகள் காரணமாக தேசிய பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.
இந்திய மீனவர்களினால் சூறையாடப்படுகின்ற மீன்வளம் காரணமாக வருடாந்தம் சுமார் 5.2 பில்லியன் ரூபா அதாவது 41 மில்லியன் டொலர் நட்டம் ஏற்படுவதாக Sunday Times பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.
1980 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையான தரவுகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வொன்றை மேற்கொள்காட்டி இந்த செய்தி வௌியிடப்பட்டுள்ளது.